திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் நேற்று கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “குஜராத் மாநிலம் சூரத் நாடாளுமன்ற தேர்தலில் எங்களது முதல் வெற்றி பதிவாகியுள்ளது. சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்தல் நாடு முழுவதும் குறைந்தபட்சம் 400 இடங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய எழுச்சியையும் ஏற்படுத்தும்.
எதிர்கட்சியை பொறுத்தவரையில் செய்வதறியாமல் நிலை குலைந்து நின்று கொண்டிருக்கின்றனர். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தேர்தல் பறக்கும் படையினர் இறக்கைகளை மடித்து விட்டு இருந்தனர். தமிழக முழுவதும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் தமிழகத்தில் ஆளும் மாநில அரசுக்கு சாதகமான செயல்பட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
கடந்த முறை வாக்களித்து, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தவர்களுக்கும் இந்த முறை வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் புகார் தெரிவிப்பதற்கு, தேர்தல் ஆணையம் சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டால் எந்த ஒரு அணுகு முறையும் இல்லை.
வாக்கு சதவீதத்தை முறையாக தெரிவிக்க இயலாமல் தேர்தல் ஆணையம் குழப்பியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாக்காளர் சீட்டினை வீடுகளுக்கு வழங்க வேண்டிய அரசு அலுவலர்கள் குறிப்பிட்ட சின்னம் குறித்த வாக்காளர் சீட்டினை விநியோகித்துள்ளனர். தேர்தலுக்கு முன்பாக கடைசி இரண்டு நாட்களில் தேர்தல் ஆணையம், பறக்கும் படையினர் எதையும் கண்டும், காணாமல் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: இன்று 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு! எந்தெந்த தொகுதிகளில் யார்.. யார்.. போட்டி? முழு விபரம்! - Lok Sabha Election 2024