சேலம்: சேலத்தைச் சேர்ந்த முனுசாமி என்ற முதியவர் ஒருவர், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் ஊழல் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "இடைத்தரகர்கள் வாயிலாக 2013-இல் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் தனக்கு அறிமுகமானார். அப்போது, சமையலர் பணிக்கு 80 பேர் தேர்வு செய்ய உள்ளதாக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் என்னிடம் தெரிவித்தார்.
மேலும், சேலத்தில் 20 பேருக்கு பணி வாய்ப்பு வழங்குவதாகவும், இதற்காக எந்த தேர்வும் எழுத தேவையில்லை என்றும் தல 3 லட்சம் ரூபாய் தருபவருக்கு பணி ஆணை வழங்குவதாகவும் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதனால், அமைச்சரின் வாக்குறுதியை நம்பி 20 பேரை தேர்வு செய்து அவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு. இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, அந்த பணத்தை கொடுத்தேன். ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் யாருக்கும் சமையலர் பணி வழங்காததால், முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியனை சந்தித்து பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டபோது சில ஆயிரங்கள் மட்டுமே கொடுத்தார். மேலும், மீதி தொகையைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையும் படிங்க: பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் மதுவிலக்கு உள்ளதா? - விசிக திருமாவளவன் கேள்வி
முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியனிடம் நான்கு தவணையாக மொத்தம் ரூ.65 லட்சம் பணம் கொடுத்த என்னை ஏமாறிவிட்டார். ஆகவே, வேலை கொடுப்பதாக மோசடி செய்த முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முனுசாமியின் புகார் மனுவை விசாரித்துள்ள சேலம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் லாவண்யா ஆகியோர் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.