கோயம்புத்தூர்: கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில், கோவை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலை, நான் எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக கூறியுள்ளார். இது மன வருத்தத்திற்குரிய செயல். எனது தந்தை இறக்கும் போது, எனக்கு வயது 11. பின்னர் நான் நன்றாக படித்து வந்தேன். அதனால் எனக்கு மேல் படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தது.
கோவைக்கு வரும்பொழுது நானும், எனது அப்பாவும் தகர டப்பாவுடன் வந்ததாக அண்ணாமலை கூறி இருக்கிறார். அவருக்காவது ஒரு டப்பாவை பிடிப்பதற்கு தந்தை இருந்தார், ஆனால் எனக்கு எனது அப்பாவே இல்லை. அண்ணாமலை 76 ஏக்கர் வைத்துள்ளதாக கூறுகிறார்கள், பண்ணையார் போல் அவ்வளவு நிலம் வைத்துள்ளவர், தகர டப்பா எடுத்து வந்தேன் ஒன்றுமில்லை என்றெல்லாம் கூறினால் ஏற்றுக்கொள்வது போல் இல்லை.
எனது அப்பா எம்எல்ஏவாக இருந்த பொழுது, சிங்காநல்லூருக்கு எவ்வளவு நன்மைகளைச் செய்தார் என்று கோவை மக்களுக்கு தெரியும். அப்பா இறந்த பிறகு, என்னை வளர்த்து தற்பொழுது எம்பி வேட்பாளராக நான் இங்கே இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் எனது அம்மா தான். என்னுடைய அம்மா எனக்கு ஹீரோ.
எனது அப்பாவை அண்ணாமலை இவ்வாறு பேசியதால் அதிமுகவினரும், என்னுடைய அப்பாவின் விசுவாசிகளும் அவரால் பயன் பெற்ற மக்களும், உறவினர்களும் மனவருத்தத்தில் இருக்கின்றோம். அண்ணாமலை கண்டிப்பாக இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
அண்ணாமலை ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும். நான் அவரை தனிப்பட்ட முறையில் எதுவும் பேசவில்லை. கோவை மாநகராட்சி 42வது இடத்தில் இருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 182வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. திமுக கவுன்சிலர்கள் ஜெயித்த பிறகு எந்த பிரச்னைக்கும் வருவதில்லை என்பதால், மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது தான் முன்னேற்றமானது வந்தது. திமுகவினர் எதுவும் செய்யவில்லை. திமுக கோவையில் பிரச்சாரம் செய்வதற்கான அடிப்படையே இல்லை. தேர்தலில் 2வது இடம் வாங்குவது கூட கடினம் தான்.
அதேபோல், ஊழலைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கோ. பாஜகவிற்கோ. மோடிக்கோ எந்த அருகதையும் இல்லை. தகர பெட்டி எடுத்து வந்ததாகக் கூறும் அண்ணாமலை, இப்போது எப்படி இது போன்ற ஒரு வாழ்க்கை வாழ்கிறார்? அதற்கான விளக்கத்தை அவரால் கூற முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "18 வருடங்களாக இந்த கட்சியில் உழைத்து, தற்பொழுது இந்த முறை வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அண்ணாமலை போல் திடீரென எந்த வேலையும் செய்யாமல் நேரடியாக இறங்கவில்லை. திமுகவும், பாஜகவும் ஊழலை பற்றி பேசக்கூடாது. இருவரும் இந்த விஷயத்தில் ஒன்றுதான்.
உதயநிதி ஸ்டாலின் எங்கு சென்றாலும் இந்தி தெரியாது போடா என்ற டி-ஷர்ட்டை போட்டுக் கொள்ள வேண்டியது, ஆனால் இந்திப் படங்களை எடுத்து விநியோகித்து நம்மை ஏமாற்றி வருகிறார். கேலோ இந்தியா போட்டியில் உதயநிதி மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து வரவேற்றார்.
மோடியின் சாதனை கோவையில் என்ன இருக்கிறது? ரோடு ஷோவில் கோவையின் பெருமையைப் பேச நிறைய இருக்கும் போது, குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நினைவுப்படுத்த பார்க்கின்றனர். அந்த சம்பவத்தை நாங்கள் மறக்க நினைக்கிறோம். ஆனால், பாஜகவினர் அதனை நினைவுபடுத்துகிறார்கள்.
கோவை மக்கள் யாரும் போய் உதயநிதியை பார்க்க முடியுமா? இல்லை அண்ணாமலையைத்தான் பார்க்க முடியுமா? நான் கோவையில் உள்ளவன், என்னை யார் எப்போ வேண்டுமேனாலும் வந்து பார்க்கலாம். அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டி அண்ணாமலைக்கு இடம் இல்லை. கோவையில் பாஜக 60 சதவீதம் வாக்கு வாங்கினால், நான் அரசியல் விட்டு விலகுகிறேன்.
கோவையில் நான் வெற்றி பெறுவது உறுதி. வெற்றி பெற்ற பிறகு வருடம் வருடம் ஆய்வுக் கூட்டம் நடத்துவேன். ஆய்வுக் கூட்டத்தில் மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பேன். தமிழ்நாட்டில் 39 சீட் பாஜக வெற்றி பெற்றால் அரசியலை விட்டே போய் விடுகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; மொழித் தேர்வு எழுத வராமல் இவ்வளவு மாணவர்களா? - 10th Tamil Paper