திருச்சி: இந்திய ஜனநாயக கட்சி சார்பில் 'தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்' மாநில மாநாடு திருச்சி சிறுகனூர் பகுதியில் நேற்று (மார்ச் 2) நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து தலைமை வகித்த நிலையில், அக்கட்சி நிறுவனத் தலைவர் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் சிறப்புரை ஆற்றினார்.
இதில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். இம்மாநாட்டில் பேசிய இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், "நாய்களை பயன்படுத்தி வேட்டையாடும் காட்டு நாயக்கர் இன மக்கள், ஆண்டுக்கு ஒருமுறை ஜக்கம்மாளை வழிபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அந்த சமுதாய மக்களை அழைத்துச் சென்று, மத்திய அமைச்சரை சந்திக்க வைத்தேன். அதன் பேரில், நாய்களும், முயலும் வனவிலங்கு பட்டியலில் இருந்து விலக்கு பெற்றுத் தரப்பட்டது. வேட்டி கட்டிய தமிழன் இந்த நாட்டை ஆளமாட்டானா? என்று பல ஆண்டு காலமாக பலரும் பேசி வருகின்றனர். அது விரைவில் நடக்கத்தான் போகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அவரை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்து வந்தோம். அப்போது இருவரும், பெற்ற தாயைப் பற்றி தான் அதிகம் பேசினோம். அப்போது, நீங்கள் ஆறு மாதத்தில் பிரதமராக வருவீர்கள் என்றேன். மோடிக்கு அந்த தகுதியும் இருந்தது. தமிழகத்தின் செங்கோளை நாடாளுமன்றத்தில் நிறுவியதால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவருக்கு கடமைப்பட்டு உள்ளோம்.
பின்னர் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதிப்பெண் கொடுத்து, அதன் அடிப்படையில் மதிப்பீடு செய்தால், பாரிவேந்தர் முதன்மையானவராக இருப்பார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு, பதினேழரைக் கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி கொடுத்தது.
ஆனால், பெரம்பலுார் தொகுதி எம்.பியாக இருந்த பாரிவேந்தர், அதைவிட 15 மடங்கு, 126 கோடி ரூபாய் தொகுதி மக்களுக்காக செலவு செய்துள்ளார். நல்ல மனிதர்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் பாரிவேந்தரை மீண்டும் கொண்டுவர வேண்டும். பாரிவேந்தர் மீண்டும் எம்.பியாக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ராஜராஜ சோழன் போல், நாடாளுமன்றத்தில் செங்கோலை சாட்சியாக வைத்து, பிரதமர் மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் மொழி மூத்த மொழியாக இருந்தாலும், நாட்டில் உள்ளவர்கள் அதன் கலாசாரத்தை முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை. அந்த கூட்டில் இருந்து விடுவித்து, உலகம் முழுவதும் படம் பிடித்துக் காட்டுவதற்கு பிரதமர் மோடி தேவைப்பட்டு இருக்கிறார்.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக, மீண்டும் ஆட்சியில் அமரப்போகிறார். அதன் பின், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி வரும். தமிழகத்துக்கு இரண்டு சைனிக் பள்ளிகள் வரபோவதாக அறிவிப்பு வெளியானதும், பெரம்பலுாருக்கு உலகத்தரம் வாய்ந்த சைனிக் பள்ளியை கொண்டுவர வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியவர், பாரிவேந்தர்.
அதனால், 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அவரது வெற்றி, பெரம்பலுார் தொகுதியில் உறுதி செய்யப்பட்டு விட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில், 400 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் போது, பாரிவேந்தர் வாயிலாக பெரம்பலுார் தொகுதி மக்கள், முழுமையான பலனைப் பெறப்போகிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்திரி ரகுராம் நியமனம்!