சென்னை: தமிழகத்தில் 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாக நேற்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்காக ஒரே ஆசிரியர்களை பல கல்லூரியில் கணக்கு காண்பித்துள்ளதாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் இணைவு பெற்ற கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரின் விவரங்களை ஆய்வு செய்தோம். ஏற்கனவே ஆசிரியர்களின் ஆதார் எண் பெறப்பட்டு அவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. ஆசிரியர்கள் தங்கள் ஆதார் எண்ணை மாற்றி அளித்துள்ளனர். அதனால் ஒரே ஆசிரியர் வேறு கல்லூரியில் பணிபுரிவதாக அளித்த தகவலை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்களின் பிறந்த தேதியை வைத்து ஆய்வு செய்த பொழுது, ஒரே பேராசிரியர் 3, 4, 5 என பல கல்லூரிகளில் வேலை பார்ப்பது போல் பெயரை பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. 2023-24ஆம் கல்வியாண்டில் 91 கல்லூரிகளில் பணியாற்றி வந்த 211 பேராசிரியர்கள் பெயர்கள் வேறு கல்லூரியிலும் இருப்பது கண்டறியப்பட்டது.
2024- 25ஆம் ஆண்டுக்குரிய அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பித்த கல்லூரிகளில் 124 கல்லூரிகளில் அளிக்கப்பட்ட பேராசிரியர் பட்டியலில் ஒரே பெயரைக் கொண்ட 470 பேராசிரியர்கள் வேறு வேறு கல்லூரியில் பணியாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 91 கல்லூரிகளில் 5 கல்லூரிகளுக்கு மேல் ஒரே பேராசிரியர் பெயர் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
நடப்பாண்டில் இதுபோன்று தவறுதலான தகவலை அளித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பேராசிரியர்களின் விபரங்களை முறைகளாக அளித்தது குறித்து ஆய்வு செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழக உறுப்பினர் மற்றும் அரசு சார்பில் உறுப்பினர் என குழுவை அமைத்து ஒரு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும்.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் இனி வாழ்நாள் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிவதை தடுக்கின்ற வகையில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும், பேராசிரியர்களுக்கு இது குறித்து விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.
தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு துவங்கியுள்ள நிலையில், பொது கலந்தாய்வுக்கு முன்னர் விசாரணை நடத்தி முடிக்கப்படும்.
ஏற்கனவே, முறைகேடான கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றுவது குறித்தும் முடிவு எடுக்கப்படும். நடப்பாண்டில் 91 கல்லூரிகளுக்கு நிபந்தனையுடன் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர்களை முறைகேடாக கணக்கு காண்பித்தது கண்டறியப்பட்டால் உடனடியாக அங்கீகாரம் ரத்து செய்யப்படும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்