சென்னை: தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி வருகிற 19ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமக தொடங்கி 35 ஆண்டுகள் நிறைவு செய்து இன்று (செவ்வாய்க்கிழமை) 36ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மேடவாக்கத்தில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.
பின்னர், மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், “திமுகவுக்கும், சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பணம் கொடுத்து வெற்றி பெற்றனர். பாமக ஒரு ரூபாய் செலவு செய்யாமல் சுயமரியாதையுடன் வெற்றி பெற்றுள்ளது. சமூக நலத்துறையை பாமகவிடம் 1 மாதம் கொடுங்கள். இட ஒதுக்கீடு எப்படி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது” என்றார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “கடந்த இரண்டரை ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் என்பது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்யும் துரோகம். அதிமுக ஆட்சிக் காலத்தில் மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆனால், அவர்கள் ஆட்சியில் மின்கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கவில்லையா? விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு தான் தாமதமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழக அரசு உடனடியாக மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், பாமக கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கும்.
காவிரி விவகாரம்: காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி சட்டமன்ற கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் தலைமையில் கூட்டம் போட்டனர். தென்மேற்கு பருவமழை இரண்டு வாரங்களில் தொடங்கி விடும். அப்பொழுது, அங்குள்ள அனைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படும். இந்த உபரி நீரை திறந்து விட்டு தண்ணீர் அளித்து விட்டதாக அரசியல் செய்வார்கள். ஆண்டுதோறும் இந்த முறையே நடக்கிறது” என்றார்.
மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இல்லம் அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, “தொடர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. முதலமைச்சரால் அத்துறையை கவனிக்க முடியாவிட்டால் வேறு ஒரு அமைச்சருக்கு அந்த துறையை வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மின் கட்டணம் உயர்வு; இவர்களுக்கெல்லாம் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை - மின்சார வாரியம் கூறிய பதில்!