தருமபுரி: தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி(PMK) சார்பில் தருமபுரியில் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி அறிமுக ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை சார்ந்த கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
அவர்களைத் தொடர்ந்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், "கடந்த 10 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. நாம் எங்கும் செல்லவில்லை, மற்றவர்கள்தான் வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்டு நம் மீது குறை சொல்கிறார்கள். இன்னும், ஒரு சிலர் நம்மை வேடந்தாங்கல் பறவைகள் என்று விமர்சனம் செய்கிறார்கள்.
நாங்கள் வேடந்தாங்கல் பறவைகள் அல்ல வேடந்தாங்கல் சரணாலயம். யார் வந்தாலும் நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம். அவர்களுக்காக உழைப்போம், அவர்களை வெற்றி பெற வைப்போம். அது தான் எங்களுடைய எண்ணம், எங்களுடைய குணம், எங்களுடைய வளர்ப்பு. நாங்கள் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்.
இதையும் படிங்க: “பாமக வேடந்தாங்கல் பறவையைப் போன்றது” - கூட்டணியை நம்பி அதிமுக இல்லை எனவும் ஈபிஎஸ் பேச்சு!
தமிழகத்தில் மீண்டும் இந்த கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தல், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு அடித்தளம். தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் வர வேண்டும். நம் மண்ணுக்காக எதாவது செய்யுங்கள் என்று எவ்வளவு காலமாக இவர்களிடம் கேட்டுக் கொண்டிருப்போம்.
தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் தான் இருபெரும் ஆறுகள் ஓடுகிறது. தருமபுரியின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் ஓடுகிறது. இரண்டு ஆறுகளின் தண்ணீர் ஓடுகிறதே தவிர அதை இம்மக்களால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதை நான் பெரிய துரோகமாக பார்க்கிறேன்" என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "50 ஆண்டுகளுக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு திமுக, அதிமுக உடன் கூட்டணி இல்லாமல் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற நீங்கள் தேர்வு செய்தீர்கள். அந்த ஐந்து ஆண்டு காலத்தில் பல திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் திட்டங்களை முழுமைப்படுத்த முடியவில்லை. அதை சௌமியா அன்புமணி நிச்சயம் முழுமை படுத்துவார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி பேசத் தெரியாமல் பிதற்றுகிறார்: பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் பதிலடி!