திருச்சி: சர்வதேச சிலம்பப் போட்டி, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மலேசியாவில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார். இதில், தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள், 5 தங்கம், 23 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.
சிலம்பம்: சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் என்பது ஒரு தடியடி, தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டாகும். இதை கம்பு சுற்றுதல் என்றும் அழைப்பர். பல்வேறு சிலம்பாட்டக் கழகங்கள் தமிழகத்தில் உள்ளன. தற்காலத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என எந்த வித வயது பாகுபாடும் இன்றி, அனைவரும் சிலம்பம் கற்றுக் கொள்கின்றனர்.
இது குறித்து, சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் நீலமேகம் நிமலன் கூறுகையில், “தமிழகத்தில் சிலம்பம் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையிலும், சிலம்ப ஆசான்களை கெளரவிக்கும் வகையிலும் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு சிலம்பம் போட்டிகள் நடைபெறுகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி சர்வதேச சிலம்பப் போட்டி மலேசியாவில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் 5 தங்கம், 23 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளனர். மேலும், இந்த மாணவர்கள் மலேசிய நாட்டில், ‘சோழன் உலக சாதனை’ நிகழ்ச்சியில் பங்குபெற்று, தொடர்ந்து சிலம்பம் சுற்றியபடி 5 கிலோ மீட்டர் பின்னோக்கி நடந்து, உலக சாதனை புரிந்துள்ளனர்.
இந்நிலையில், மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய மாணவர்களை கௌரவிக்கும் விதமாக, பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்க ஏஐ கண்காணிப்பு அமைப்பு தொடக்கம்!