திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், நாங்குநேரியை அடுத்துள்ள வாகைகுளம் அருகே தேசிய நான்கு வழிச்சாலையோரம் தனியார் பெட்ரோல் நிலையம் உள்ளது. இதில், அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் என வந்து பெட்ரோல், டீசல் நிரப்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று (வியாழன்கிழமை) இரவு ஊழியர் முருகன்(45) என்பவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த இருவர் தங்களது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டனர்.
பெட்ரோல் போட்டுப் பின்னர், அதில் ஒருவர் தன்னிடம் இருந்த அரிவாளை எடுத்து, பெட்ரோல் நிலையம் ஊழியர் முருகனை வெட்டுவதற்கு ஓங்கியபடி, பாய்ந்துள்ளார். இதனால், செய்வதறியாது பதறிப்போன ஊழியர் முருகன், அவ்விருவரிடமும் இருந்து தப்பித்து அங்கிருந்த அலுவலகத்திற்குள் தப்பியோடினார்.
இதையடுத்து சக ஊழியர்கள் அங்கு வருவதற்குள், இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடினர். இது தொடர்பாக அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய நாங்குநேரி போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் வலைவீசித் தேடிவருகின்றனர்.
கடந்த ஆண்டு இதே பெட்ரோல் நிலைய அலுவலகத்தில் ரூ1.5 லட்சம் மர்ம நபர்களால் திருடிய சம்பவம் நடந்தது. அது இன்னும் துப்பு துலங்காத நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அங்கு ஊழியரிடம் வழிப்பறி மற்றும் கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதே பெட்ரோல் நிலையத்தில், கடந்தாண்டு ரூ.1.5 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவமும் அரங்கேறி இருந்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக இப்பெட்ரோல் நிலையத்தில் ஊழியரை அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பெட்ரோல் நிலையத்திற்கு வந்து செல்லும் வாகன ஓட்டிகளும் இதனால், அச்சமடைந்துள்ளனர்.
எப்போதும் பரப்பாக காணப்படும் நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இது போன்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பீதியடைந்துள்ளனர். ஆகவே, இப்பகுதியில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் விதமாக, காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு மாதத்தில் 2,000 போன் கால்.. ஜெயக்குமார் பயன்படுத்திய செல்போன்கள் எங்கே? கிணற்று நீரை இறைக்கும் போலீசார்! - Nellai Jayakumar Case Update