தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த வழக்கில் சண்முகவேல்(82) என்ற முதியவர் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கை அப்போதைய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா, புலன் விசாரணை செய்து, கடந்த 28 ஜீலை 2021-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு நேற்று (மார்ச் 4) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துலெட்சுமி விசாரணைக்கு ஆஜரானார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம்சாட்டப்பட்ட சண்முகவேல் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இதனிடையே, இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா, நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் எப்சி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.
இதையும் படிங்க: சாந்தனின் உடல் இலங்கையில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நல்லடக்கம்..கதறி அழுதத் தாய்..!