தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக மத்திய அரசை கண்டு பயப்படுகிறது. திமுக எதற்கும் தயாரானவர்கள். தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்ள ராஜதந்திரம் என்ற பெயரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கும். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு கஞ்சா போன்ற போதைப் பொருள் கலாச்சாரம் தான் காரணம்.
மாணவர்களையும், இளைஞர்களையும் குறி வைத்து கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது. இதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. இது வருங்கால சமுதாயத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் வருங்கால சமுதாயத்தை நல்ல ஒரு சமுதாயமாக உருவாக்க முடியும்.
மேலும், சசிகலாவின் சுற்றுப்பயணம் குறித்து கேட்டதற்கு, ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என எல்லோரும் முயற்சி செய்வது இயற்கை. இதற்கு பழனிசாமி தடையாக இருக்கும் வரை இந்த முயற்சி பலிக்காது. தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான சிறந்த கூட்டணியாக உள்ளது. மக்கள் விரோத திமுக அரசை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அதில் உறுதியாக வெற்றி பெறுவோம்.
அதிமுகவில் இரட்டை இலை சின்னம் இருப்பதால் தொண்டர்கள் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் தவறான நடவடிக்கையையும், அவரின் சுயநலத்தையும் புரிந்து கொண்டு தக்க முடிவு எடுப்பார்கள் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால், 2026க்குப் பிறகு அதிமுக கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவிற்கு எதிரான மனோபாவம் தமிழ்நாட்டில் இருந்தது.
இப்போது அது மாறி வருகிறது. 2024ஆம் ஆண்டு தேர்தலில் எங்களுடைய கூட்டணி அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்தது. இதே நிலையில் 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சிகளை செய்வோம். பாஜக அரசியல் ரீதியாக, திமுகவிடம் இணக்கம் காட்டவில்லை. மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” என்று கூறினார். இந்தப் பேட்டியின் போது அமமுக துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க விடாமல் திமுக தடுக்கிறது" - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு! - ANNAMALAI Vs DMK