சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என இன்று (மே 23) உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ம் கல்வியாண்டில் இளங்கலை, முதுகலை மாணவர்கள் சேர்க்கை இணையதளத்தின் மூலம் நடத்தப்பட வேண்டும். தனியார் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரிகளும் கட்டண விவரங்களை வெளிப்படையாக www.tngasa.in என்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கையில் விதிமுறைகளை மீறினால் கல்லூரி முதல்வர்களும், மாணவர் சேர்க்கை குழுவுமே பொறுப்பேற்க வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைன் வழியில் மட்டுமே பெற வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரியில் உள்ள இடங்களை, சுயநிதிப் பிரிவில் உள்ள இடங்களை நிரப்புவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும். இடஒதுக்கீடு விதிகளை ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக கண்டிப்பாக அமல்படுத்தி பின்பற்ற வேண்டும்.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. இது தான் பிராட்வே பஸ் ஸ்டாண்டா? வெளியான மாதிரி படம்!
கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை மாணவர்கள் பதிவு செய்யும் நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் குறைந்தபட்சம் ஒரு தொடர்பு எண் இருக்க வேண்டும், அதன் மூலம் அனைத்து தகவல் தொடர்புகளும் அனுப்பப்பட வேண்டும். மாணவர்கள் சேர்க்கை தொடர்பான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கையில் கட்டாயம் இட ஒதுக்கீடு கடைபிடிக்க வேண்டும். அரசுக் கல்லூரியில் 100 சதவீதமும், அரசு உதவிப்பெறும் சிறுபான்மைக் கல்லூரியில் 50 சதவீதம் இடங்களும், அரசு உதவிப்பெறும் சிறுபான்மையற்றக் கல்லூரிகளில் 90 சதவீதமும், அரசு உதவி பெறும் கல்லூரியில் உள்ள சுயநிதிப்பிரிவில் 50 சதவீதம் இடங்களும், சுயநிதிக் கல்லூரிகளில் 50 சதவீதம் இடங்களும் இட ஒதுக்கீட்டின் படி ஒவ்வொருப் பாடப்பிரிவிலும் கடைபிடிக்க வேண்டும்.
மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அரசுக் கல்லூரிகளின் மாணவர்கள் சேர்க்கை பட்டியலை www.tngasa.in என்ற இணையதளத்திலும், அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் அவர்களின் இணையதளதிலும் வெளியிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
மேலும், மொத்தம் உள்ள 164 தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசிநாள் ஆகும். இந்தக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 644 பேர் பதிவு செய்துள்ளனர்.