திருப்பத்தூர்: தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி தாளாளர் முனிரத்தினம். இவர் பள்ளி தலைவராகவும் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பள்ளியைத் துவங்கும் போது பள்ளிக்கு பங்குதாரர் தேவை என நாளிதழ்களில் விளம்பரம் செய்தார்.
அதன் பேரில், ஒரு பங்கு 25 லட்சம் வீதம், சுமார் 100 பேரிடம் பங்குத்தொகையாக வசூலித்து பள்ளி நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. நாளிதழ் விளம்பரத்தின் அடிப்படையில், இக்கல்வி நிறுவனத்தில் முதலீடு தொகையை ஈட்டுவதற்காக நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் (67), ஆலங்காயம் வட்டார உதவி கல்வி அலுவலர் சித்ரா (59), அவரது கணவர் செல்வம் (65) ஆகிய மூன்று பேரும் பங்குதாரர்களிடம் முதலீட்டைப் பெற்றுக் கொடுக்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டு உள்ளனர்.
பல கோடி மோசடி? இந்நிலையில், இடைத்தரகர்கள் மூலமாக திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த பார்த்தசாரதி ரூபாய் 85 லட்சம், மணி என்பவர் ரூபாய் 23 லட்சம், நாகராஜ் என்பவர் ரூபாய் 45 லட்சம், சாமுண்டீஸ்வரி தேவி பாலா ரூபாய் 25 லட்சம், சரவணன் ரூபாய் 25 லட்சம், இளங்கோ ரூபாய் 25 லட்சம், ஸ்ரீதர் ரூபாய் 20 லட்சம், ராமசுந்தரம் ரூபாய் 3 கோடியே 25 லட்சம், ராஜம் ஒரு கோடியே 75 லட்சம், கஜேந்திரன் 3 கோடி, சுரேஷ்குமார் 1 கோடியே 35 லட்சம் என மொத்தம் 12 கோடியே 23 லட்சம் ரூபாயை முதலீடாகப் பெற்று,பள்ளி தாளாளர் முனிரத்தினத்திடம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறு.. 5 வயது சிறுவனை கல்லால் அடித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!
புகார்: இந்நிலையில், பங்குதாரர்களுக்கு 7 வருடங்களாக முதலீட்டிற்கு உண்டான லாபம் மற்றும் ஈவுத்தொகை எதுவும் கொடுக்காமல் முனிரத்தினம் ஏமாற்றி வந்ததாக தெரிய வருகிறது. இது குறித்து முதலீட்டாளர்கள் தாளாளரிடம் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து நாட்றம்பள்ளியைச் சேர்ந்த பார்த்தசாரதி மற்றும் சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார் ஆகிய இருவரும் தருமபுரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இடைத்தரகர்களாக செயல்பட்ட ஆலங்காயம் வட்டார உதவி கல்வி அலுவலர் சித்ரா, அவரது கணவர் செல்வம் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் ஆகிய மூன்று பேரை கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி இரவு தர்மபுரி குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், முக்கிய நபரான பள்ளி தாளாளர் முனிரத்தினம் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பணியிடை நீக்கம்: இதனிடையே, திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வட்டார தொடக்க உதவி கல்வி அலுவலர் சித்ராவை பணியிடை நீக்கம் செய்து தொடக்கப்பள்ளி கல்வித்துறை இயக்குனர் நரேஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.