கோவை: அண்ணா சிலை பகுதியில் உள்ள இதய தெய்வம் மாளிகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மற்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனிடம் நேற்று அவிநாசி சாலையில் பாஜகவினர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் தங்களின் கார் நின்று கொண்டிருந்தது குறித்துக் கேட்டதற்கு, அவிநாசி சாலை அனைவருக்கும் பொதுவான சாலை தானே, அவர்கள் அந்நேரத்தில் அங்கே இருப்பார்கள் என்று எனக்கு என்ன தெரியும்? நிகழ்ச்சி நடந்ததற்கு எதிர்புறம் எனது நண்பருடைய வீடு உள்ளது எனப் பதிலளித்தார்.
பின்னர் இன்று மதியம் 2:15 மணிக்கு சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜகவிலிருந்து 2 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் சேர உள்ளார்கள், இது சிரிப்புக்காகக் கூறவில்லை உண்மை தான். அது கொங்கு மண்டலமாகவும் இருக்கலாம், தென் மண்டலமாகவும் இருக்கலாம்.
இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் தனித்து நின்ற சரித்திரம் இல்லை, அதிமுக மட்டும் தான் ஜெயலலிதா தலைமையில் கடந்த 2014ஆம் ஆண்டு தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவின் உண்மையான B டீம் திமுக தான்.
நான் அதிமுகவில் ராஜாவாக இருக்கிறேன், அப்படி இருக்கையில் நான் எதற்கு பாஜகவின் கூஜாவாக இருக்க வேண்டும். பாஜக யாரேனும் ஒரு பெயரைச் சொல்ல முடியுமா, சட்டமன்ற உறுப்பினரை நாங்கள் உழைத்து உருவாக்கியுள்ளோம். 'தில்' இருந்தால் இந்த 40 நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு சீட்டை அவர்கள் ஜெயித்துக் காண்பிக்கட்டும்.
இது தென் மாநிலம், இங்கு எல்லாம் அவர்கள் சலசலப்பிற்கு அதிமுக அஞ்சாது என்றார். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே போல் ஒருவரை இங்கு உருவாக்கலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள், அதெல்லாம் இங்கு நடக்காது. அதிமுகவை நம்பித்தான் பலரும் வருவார்களே தவிர, இங்கிருந்து யாரும் வெளியில் செல்ல மாட்டார்கள். அவ்வாறு செல்லும் யாரும் உண்மையான அதிமுக கட்சியினராக இருக்க மாட்டார்கள். வருகின்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் நாங்கள் வெல்வோம். அப்படி பாஜக ஜெயித்தால் நான் அரசியலில் விட்டே விலகுகிறேன்.
கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை, எனவே பாஜக கோவையில் ஜெயிக்க வேண்டும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது. பாஜக பித்தலாட்டத்தை உச்சநீதிமன்றம் தோலுரித்துக் காட்டியுள்ளது. பெட்டியை மாற்றுகிறீர்கள், சீல் வைத்த காகிதத்தை மாற்றுகிறீர்கள், அதற்குள் மூன்று கவுன்சிலர்களை விலைக்குப் பேசுகிறீர்கள் இப்படிப்பட்ட கட்சி அதிமுக எம்எல்ஏ எங்கள் கட்சிக்கு வருகின்றனர் எனக் கூறுகிறார்கள்.
பஞ்சு மிட்டாய் கொடுத்து எம்எல்ஏக்களை வாங்கி விடலாம் எனப் பாஜகவினர் தேடிக் கொண்டிருக்கின்றனர். பாஜகவினர் ஒரு டீ கூட வாங்க வழியில்லாமல் போவார்கள்" எனச் சாடினார். முன்னதாக பேசிய கல்யாண சுந்தரம், "கடந்த ஒரு வாரக் காலமாகவே முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்தும், பிற அமைச்சர்கள் குறித்தும் மாவட்டச் செயலாளர் குறித்தும் பாஜகவினரும், திமுகவினரும் அவதூறு செய்திகளை இணைந்து பரப்பி வருகின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையப் போவதாக ஒரு வதந்தியைத் தொடர்ச்சியாகப் பரப்பி வருகின்றனர்.
நாங்கள் எங்கள் சாதனைகளை மக்களிடம் கூறி வாக்குகளைச் சேகரிக்க உள்ளோம். எந்த வித மக்கள் பணியையும் செய்யாமல் இருக்கக்கூடிய திமுக, பாஜக போன்ற கட்சிகள் இது போன்ற அதிமுக தொண்டர்களின் மனநிலையைக் குழப்பி வருவதாகத் தெரிவித்தார். அறம் என்று ஒன்று இருந்தால் திமுகவும், பாஜகவும் இது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: "பாஜக-வில் இணைந்தால் அரசியல் லட்சியங்களை நிறைவேற்ற முடியும்" - வானதி சீனிவாசன்