சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு, 76 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி மகளிர் அணி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
மேலும் தையல் எந்திரம், காற்றாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மகளிர் தினத்தை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் வந்த பெண்ணைச் சுற்றி கலைக் குழுவினர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி, தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “பள்ளி, கல்லூரி உள்பட தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது.
போதைப்பொருள் விற்பனை குறித்து சட்டப்பேரவையில் பேசியுள்ளேன். ஆனால், முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகம் போதைப்பொருள் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது என்பது வேதனையாக உள்ளது. பிப்ரவரி 15 அன்று டெல்லியில் போதைப்பொருள் பிடிபட்டது. இதற்கு காரணமாவர், திமுகவைச் சேர்ந்தவர். ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ள போதும், அவர் காவல்துறை உயர் அதிகாரி, முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சரின் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். முதலமைச்சரின் குடும்பத்தோடும் நெருக்கமாக இருந்துள்ளார். எனவே, தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும். முதலமைச்சர் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் இன்று வரை எந்த விளக்கமும் தரவில்லை.
அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில், கல்வி நிலையங்கள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 2 ஆயிரத்து 138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவைச் சேர்ந்தோர் கைதாகவில்லை. கஞ்சாவுக்கு அடிமையான இளைஞர்கள், அதில் இருந்து மீள முடியாமல் உள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய நபர், டெல்லியில் கைதான பிறகு சோதனை அதிகரிக்கப்பட்டு, அதிகமாக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு வருகிறது. தமிழகம் போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது. ஸ்டாலின் இனியாவது உரிய பதில் அளிப்பார் என எதிர்பார்க்கிறேன். நீங்கள் நலமா என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசுவுக்குச் சொந்தமான கொரியர் அலுவலகத்தில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை குறித்த செய்தி சேகரித்த ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டுள்ளார். முதலில் பத்திரிகையாளர்கள் நலமாக இருக்கிறீர்களா? பத்திரிகையாளர்களைத் தாக்குவது கண்டிக்கத்தக்கது. பத்திரிகையாளர் வாரியம் மூலம், உங்களுக்கு ஏதாவது பலன் கிடைத்துள்ளதா? மின் கட்டணம், சொத்து வரி உயர்வு போன்றவற்றை அமல்படுத்திவிட்டு நீங்கள் நலமா என்று கேட்பது எப்படி சரியாக இருக்கும்?
அரசு நடவடிக்கை எடுக்காததால்தான் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சாவை மாநில அரசு முறையாக கட்டுப்படுத்தியுள்ளது என்று சொல்கிறீர்கள். இதற்கு முன்பாக இருந்த டிஜிபி அழகாக பேசுவார். அவர் சைக்கிளில் போவதை எல்லாம் அழகாக செய்தியில் போடுவீர்கள், அவர் கஞ்சா வேட்டைக்கு 1.0, 2.0 என ஓ போட்டுக் கொண்டே ரிட்டேர் ஆகிவிட்டார். கஞ்சா கட்டுப்படுத்தப்படவில்லை.
26 வழக்குகள் உள்ள ஜாபர் சாதிக்கை யார் என்றே விசாரிக்காமல் டிஜிபி சந்திக்கலாமா? ஒருமுறை சந்தித்த புகைப்படம் மட்டும் வந்துள்ளது. இன்னும் எத்தனை முறை சந்தித்தார்களோ? போதைப்பொருள் தடுப்பில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு அரசு கூறுவது சரியா? வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கலாம். போதைப்பொருள் தடுப்பை ஒப்பிட்டுப் பார்க்கலாமா? அப்படி ஒப்பிட்டுப் பார்த்தால், அந்த அரசு மோசமான அரசு என்று அர்த்தம்.
அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேசி வருகிறோம். பாமக உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால், வெளிப்படையாக அது பற்றி கூறுவோம். பாஜக வாக்கு வங்கி, அதிமுகவைவிட அதிகரித்துள்ளதாக ஊடகங்கள்தான் போடுகிறீர்கள். உண்மையை தெரிந்துகொள்ள மக்களிடம் சென்று கேளுங்கள். பழைய ஓய்வூதியம் உள்பட அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது அதிமுகவில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு.
மற்ற கட்சி குறித்து நாங்கள் கருத்து கூற முடியாது. எதிர்ப்பு வாக்குகள் திமுகவிற்கு செல்லக்கூடாது என்பதால்தான் நாங்களும், பாஜகவும் தனித்தனியே நிற்பதாக திருமாவளவன் கூறுவதாக சொல்கிறீர்கள். திருமாவளவனுக்கும், எங்களுக்கும் என்ன சம்பந்தம்? எங்கள் கட்சி குறித்து அவர் ஏன் பேச வேண்டும்? நாங்கள் பொன்விழா கண்ட கட்சி. திருமாவளவன் எங்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. மறைந்த தலைவர்கள் குறித்துதான் மோடி பேசியுள்ளார்.
இப்போது இருக்கும் தலைவர்கள் குறித்து அவர் எதுவும் பேசவில்லை. தமிழகம் வளர்ச்சி பெற எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிதான் காரணம். எதிர் அணியில் இருப்பவர்களும், அவர்கள் இருவரையும் போற்ற காரணம், அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள்தான். எங்களுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை என்று கேட்கிறார்கள். மாநில உரிமையைப் பாதுகாக்க, மாநில உரிமையை நிலைநிறுத்த, உரிய நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற தனி அணியை அமைத்துள்ளோம்.
30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி, அதிமுக. நாடாளுமன்றத்தில் 38 திமுக எம்பிக்கள் இருந்து என்ன பயன்? தமிழகத்திற்காக ஒரு நாளாவது நாடாளுமன்றத்தை முடக்கி இருப்பார்களா? மேகதாது அணைக்கு இன்று வரை தடை பெற திமுக முயற்சிக்கவில்லை. தமிழகத்தின் கடன் அதிகரித்து வருகிறது. வாங்கும் கடனை மூலதனச் செலவு செய்யவில்லை. சம்பளம் உள்பட வருவாய் செலவுதான் செய்கின்றனர்.
போதைப்பொருள் கடத்தலில் திமுகவினர் ஈடுபட்டு வரும் நிலையில், போதைப்பொருட்களை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், வரும் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் விசிக-2, மதிமுக-1 முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு!