சென்னை: சென்னை அண்ணாநகரில், கோடை வெயிலினால் பாதிக்கப்படும் மக்களுக்கு அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெயிலால் பாதிக்கப்படும் மக்களுக்கு தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், மோர், சாத்துக்குடி உள்ளிட்ட பழ வகைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் கூறுகையில், “தமிழகத்தில் பரிசல் சென்ற ஆற்றில் இன்று பேருந்து செல்லும் அளவிற்கு நீர் நிலைகள் மாறியுள்ளது. நாட்டில் எவ்வளவு பிரச்சினை உள்ளது. ஆனால், கோட்டையில் இருந்து ஆய்வு செய்யாமல் முதலமைச்சர் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்கிறார்.
மழைக் காலத்தில் நீரை சேமிக்காத காரணத்தால் இன்று நீர் பிரச்சினை தலை விரித்தாடும் சூழல் உள்ளது.
விமர்சனங்களைத் தாங்கும் அளவிற்கு அதிமுகவுக்கு பக்குவம் இருந்தது. ஆனால், இன்று அரசு விதிகளைப் பின்பற்றாமல் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். அவதூறாகப் பேசியிருந்தால் முதலில் 41a நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்க வேண்டும்.
விளக்கம் சரியில்லை என்றால், அதன் பின் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின் மன்னர், உதயநிதி ஸ்டாலின் இளவரசர் என நடந்து கொள்கிறார்கள். அதிமுக ஆட்சியில் பொய் வழக்கு போடாமல் உண்மை வழக்கை வைத்தே நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
பின்னர், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து அவர் பேசுகையில், “இது முற்றிலும் காவல் துறையினரின் தவறு தான். தன் உயிருக்கு ஆபத்து என ஒருவர் புகார் அளிக்கும் போது காவல்துறை நடவடிக்கை எடுத்து இருந்தால் இப்படி அவரை சடலமாக மீட்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. புகார் கொடுத்த போதே காவல்துறை எச்சரிக்கையாக செயல்பட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது.
இப்படி நடந்ததற்கு காரணம் விடியா அரசின் காவல்துறையினர் தான். முதலமைச்சரைப் போல தமிழக காவல்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது” என்றார். மேலும், தொடர்ந்து அவர் பேசுகையில், பிரதமர் என்பவர் பொதுவான நபர், எல்லோருக்கும் அவர் பிரதமர் ஆனால் பொதுவான பிரதமர் மதத்தால் பிளவு படுத்தி இந்துக்கள் வாக்குகளை பெற நினைப்பது கண்டிக்கத்தக்கது.
ஆங்கிலேயர் எப்படி மக்களை பிரித்து ஆட்சி செய்தனரோ அதே போல ஒரு கோட்பாட்டை இன்று பிரதமர் எடுத்துளார். இஸ்லாமியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அவர்களை பிளவுபடுத்தி வாக்குகளை சேகரிக்க நினைப்பதை ஏற்றுகொள்ள முடியாது.
மோடி, காங்கிரஸ் என யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழக இட ஒதுக்கீட்டில் ஒன்றும் செய்யமுடியாது. ஒரு பக்கம் சட்ட ஒழுங்கு பிரச்சினை மற்றொருபுறம் போதை பொருளால் இளைஞர்கள் பெரிய அளவில் அடிமையாகி உள்ள நிலையில் தற்போது குடிநீர் பிரச்சினை அதிகரித்துள்ளது” என்றார்.