ஈரோடு: ஈரோடு மாநகராட்சியின் அவசர மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாநகராட்சியின் மாமன்ற அவரசக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில், மேயர் நாகரத்தினம் தலைமையில் நேற்று (பிப்.16) நடைபெற்றது. இந்த மாமன்ற அவசரக் கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கவுன்சிலர்கள், கடந்த அதிமுக ஆட்சியில் கரோனா காலகட்டத்தில் நேதாஜி தினசரி காய்கறி சந்தை வியாபாரிகளுக்காக, பழைய இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கடைகளை வியாபாரிகளுக்கு கொடுக்காமல், தனியாருக்கு ஒதுக்கீடு செய்வதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் தரமான சாலைகள் அமைக்காததைக் கண்டித்தும், கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாநகராட்சி அவசர மாமன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக கூட்டம் தொடங்கியும், திமுக கவுன்சிலர்கள் பலரும் வராமல் மாமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் காலியாக இருந்தன.
இதையும் படிங்க: நெல்லை மக்களவை தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியா? திடீர் டெல்லி பயணத்தின் பின்னணி என்ன?