சேலம்: சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டியை அடுத்த தாகூர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளராக பதவியில் இருந்தார். நேற்றிரவு 12 மணி அளவில் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் எதிரே உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், அவர் தாதகாப்பட்டி பிரதான சாலையில் இருந்து மாரியம்மன் கோயில் வீதி வழியாக வீட்டுக்கு சில அடி தூரத்தில் வந்துள்ளார். அப்போது அவரை நோட்டமிட்டப்படி, 2 இருசக்கர வாகனங்களில் வந்த சிலர், கும்பலாக சண்முகத்தின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து குறுக்கே அவர்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
அதன் பின்னர், அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவால், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் சண்முகத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனைக் கண்ட அந்த பகுதியில் உள்ளவர்கள், சம்பவ இடத்திற்கு வருவதைப் பார்த்த கொலையாளிகள் அங்கிருந்து தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைவெறி தாக்குதலில், சண்முகத்தின் தலைப்பகுதி முற்றிலுமாக சிதைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சேலம் மாநகரின் துணை காவல் ஆணையர் மதிவாணன் மற்றும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சண்முகத்தின் உறவினர்களும், அதிமுக கட்சி நிர்வாகிகளும் சண்முகத்தின் உடலை போலீசார் எடுக்கவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
அரசியல் முன்விரோத காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இரவு நேரத்தில் அதிமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: விசிகவை சேர்ந்த இளைஞர் வெட்டிக் கொலை..மயிலாடுதுறையில் பயங்கரம் - போலீசார் தீவிர விசாரணை