திருநெல்வேலி: நெல்லையில் கடந்த மே 4ம் தேதி கொடூரமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் வழக்கு போலீசாருக்கு சவாலாக இருந்து வருகிறது. கடந்த 13 ஆம் தேதி ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்த தென்மண்டல ஐஜி கண்ணன், வழக்கின் நிலையை விளக்கினார். அப்போது அவர், 'ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் இடைக்கால உடற்கூறாய்வு அறிக்கை மட்டுமே தங்களுக்கு கிடைத்ததாகவும் டிஎன்ஏ உள்ளிட்ட முழுமையான அறிக்கை வந்த பிறகே பிற விவரங்கள் தெரியவரும்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
நீளும் மர்மம்: மேலும், ஜெயக்குமார் வழக்கை விசாரிக்க டிஎஸ்பிக்கள் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தினரிடமும் அவர் எழுதியதாக கூறப்படும் கடிதங்களில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்பட 32 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
குறிப்பாக ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டபோது அவரது கை மற்றும் கால்கள் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டிருந்தன. மேலும், அவரது வாயில் இகுந்து பாத்திரம் கழுவ பயன்படுத்தப்படும் ஸ்க்ரப் எடுக்கப்பட்டது. எனவே ஜெயக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பின்னர் கை, கால்களை கட்டி எரிக்கப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். ஆனால் அதில் அவர்களால் உறுதியான முடிவுக்கு வர இயலவில்லை.
டார்ச்லைட்: மேலும், ஜெயக்குமார் காணாமல் போனதாக கூறப்பட்ட 2ம் தேதி அவர் சூப்பர் மார்க்கெட்டில் டார்ச் லைட் வாங்கி இருந்தார். அந்த டார்ச்லைட் அவர் உடல் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது. எனவே தடய அறிவியல் சிறப்பு குழுவினர் டார்ச்லைட் உட்பட பல்வேறு தடயங்களைப் கைப்பற்றி ஆய்வுக்குட்படுத்தினர். ஆனால், தடய அறிவியல் ஆய்வு உட்பட முக்கிய ஆய்வுகளின் முடிவுகள் வரவில்லை என ஐஜி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜெயக்குமார் வழக்கில் ஏற்கனவே டிஎஸ்பிக்கள் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வரும் சூழலில் தற்போது தனிப்படைக்கு கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாகுல் ஹமீது: இந்த குழுவில் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது கூடுதல் அதிகாரியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இதுபோன்ற சிக்கலான வழக்குகளை புலனாய்வு செய்வதில் வல்லவர் என டிபார்ட்மென்ட்டில் பெயர் எடுத்தவர். குறிப்பாக பல்வேறு குற்ற வழக்குகளில் ஆய்வாளர் சாகுல் ஹமீது செய்த புலனாய்வுகளால் அந்த வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே சாகுல் ஹமீது வரவு ஜெயக்குமார் வழக்கில் திருப்புமுனையாக அமையும் என்பது போலீசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: கொலையா, தற்கொலையா? - நெல்லை ஜெயக்குமார் வழக்கு குறித்து ஐஜி கண்ணன் விளக்கம்!