திருச்சி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி, மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் நேற்று (ஏப்.10) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஜோதிமணிக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த நிலையில், பரப்புரையின் போது சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, மதிய உணவிற்குப் பின்னர் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ சென்றுவிட்ட நிலையில், ஜோதிமணி மட்டும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதையடுத்து, மருங்காபுரி அருகே உள்ள அடைக்கம்பட்டி என்ற கிராமத்திற்கு வாக்கு சேகரிக்கச் சென்ற போது, ஜோதிமணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவ்வூர் இளைஞர்கள் ஒரே மாதிரியான சட்டை அணிந்து, பீப்பி ஊதியவாறு அவர் காரை நோக்கி முற்றுகையிடும் நோக்கில் சென்றுள்ளனர். அதனைக் கண்டு சுதாரித்த ஜோதிமணி, அந்த ஊரில் வாக்கு சேகரிக்கச் செல்லாமல், காரை விட்டு இறங்காமலேயே சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த வாரங்களில் ஜோதிமணிக்கு ஆதரவாக விளையாட்டு நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, அவரை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் பேசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் பொதுமக்கள் இன்றி சேர்கள் காலியாக கிடந்த நிலையில், தற்போது கிராம மக்கள் திரண்டு வேட்பாளரை வெளியேற்றிய சம்பவம் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.