சேலம்: அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விஷால் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ரத்னம் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். அப்போது ரத்னம் திரைப்படத்தின் கதாநாயகன் விஷால், தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர் ஹரி உள்ளிட்டோர் மாணவர்கள் மத்தியில் விரிவாக கலந்துரையாடினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால் கூறுகையில், "வரும் 2026ஆம் ஆண்டு கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன். அதை திரும்பத் திரும்பச் சொல்ல மாட்டேன். வரும் போது கண்டிப்பாக வருவேன். வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எனது பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
கூட்டணி குறித்து யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் அதுவே போதும். 2026ஆம் ஆண்டு நான் அரசியலுக்கு வருவேன் என்று கண்டிப்பாக இப்போதும் கூறுகிறேன். என்னை வரவிடக் கூடாது என நீங்கள் நினைத்தால், எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்தால் நான் வரவே மாட்டேன்.
நீங்கள் நல்லது செய்தால் நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இப்போது கூட தமிழ்நாடு முழுக்க கிராமம் கிராமமாக சென்று பாருங்கள். குறைகளே இல்லை என்று என்ற நிலை இருந்தால் நான் ஏன் அரசியலுக்கு வரப்போகிறேன். எனக்கு என்ன வேலை இருக்கிறது? திமுக அல்லது அதிமுக செயல்பாடு குறித்து இன்று நான் குறிப்பிட்டு சொல்லவில்லை.
எந்த கட்சியாக இருந்தாலும் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் அப்படி தமிழ்நாடு முழுக்க அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது தான் என்னுடைய கேள்வி. மக்கள் மட்டும் தான் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமா? நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் ஆகியோர் ஏன் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்கள்? மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு மருத்துவமனையை அவர்கள் ஏன் புறக்கணிக்கிறார்கள்? அதுதான் என்னுடைய கேள்வி. அந்த சூழல் மிகப்பெரிய கொடுமையாக உள்ளது.
நிச்சயமாக தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. அதனால் நிச்சயம் நான் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். நடிகர் சங்கத்தை பொறுத்தவரை மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அதற்கான செயற்குழு, பொதுக்குழு இருக்கிறது. அனைத்தையும் கூட்டி சங்கத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்த உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சேலம் - சென்னை இடையேயான இண்டிகோ விமான சேவை நேரத்தில் மாற்றம்! - Salem To Chennai Flight Service