சென்னை: நடிகர் வடிவேலு இன்று (மார்ச்.03) முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள 'கலைஞர் உலகம்' அருங்காட்சியகத்திற்குச் சென்று பார்வையிட்டார். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் மூலம் கருணாநிதியோடு கலந்துரையாடி மகிழ்ந்தார்.
முன்னதாக, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் அருகே ரூ.39 கோடி செலவில் 'கலைஞர் நினைவிடம்' அமைக்கப்பட்டது. நூலகம், மினி திரையரங்கம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த நினைவிடத்தைக் கடந்த பிப்.28ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கலைஞர் நினைவிடம் சிறப்பம்சங்கள்: இங்கு, 'தமிழ் செம்மொழி' என்ற கடிதம் தமிழிலும், ஆங்கிலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி சமாதியின் பின்புறம் அவரது உருவம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி சமாதிக்குப் பின்னால் 'கலைஞர் உலகம்' என்ற டிஜிட்டல் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளே 'கலைஞரின் எழிலோவியங்கள்' என்ற பெயரில் கருணாநிதியின் இளமைக் காலம் முதல் அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள், போராட்டங்கள், அவர் நிறைவேற்றிய திட்டங்கள் ஆகியவை புகைப்படத் தொகுப்பாக இடம்பெற்றுள்ளது. அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திருவள்ளுவர் சிலை, அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்கள் புகைப்படமாக அமைக்கப்பட்டுள்ளன.
'கலையும் அரசியலும்' என்ற தலைப்பில் கருணாநிதி குறித்த வாழ்க்கை வரலாறு குறும்படமாகத் திரையிடப்படுகிறது. 'கலைஞருடன் ஒரு செல்பி' என்ற அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் அமர்ந்திருக்கும் தோற்றத்தில் இருக்கிறார். அங்குப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். கருணாநிதியின் நினைவிடத்தை மக்கள் பார்வையிடக் கட்டணம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போலியோ சொட்டு மருந்து முகாம்; 98.18 சதவீதம் பேர் பயனடைந்தனர்.. விடுபட்டவர்களுக்கு பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!