சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர். சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
முன்னதாக, நடிகர் மன்சூர் அலிகான் அரசியல் ஆசையால் 'இந்திய ஜனநாயக புலிகள் மக்கள் கட்சி' என்ற கட்சியை ஆரம்பித்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், இந்திய ஜனநாயக புலிகள் மக்கள் கட்சியின் முதல் மாநாடு நேற்று (பிப்.24) பல்லாவரத்தில் நடைபெற்றது. அதில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1. வாக்கு இயந்திரங்களை ஒழித்து வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
2. போதைப்பொருள் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும்.
3. வேளாண் விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கக்கோரி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
4. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் அடாவடி போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
5. தமிழக மீனவர்கள் ஒருவரும் இனி கைது செய்யப்படக்கூடாது. தமிழ் ராணுவப் படை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை பாதுகாக்க வேண்டும்.
6. தமிழ்நாட்டு கல்வி நிலையங்கள் கட்டாய தமிழே பயிற்றுமொழி சட்டம் இயற்றிட வேண்டும்.
7. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க சட்டமன்றத்தில் அரசாணை வெளியிட வேண்டும்.
8. 10 ஆண்டுகளை கடந்த நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்திட வேண்டும்.
9. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்குமான சமூகநீதியை உறுதிசெய்க.
10. தொடரும் சாதியாதிக்க படுகொலைகளைத் தடுத்து நிறுத்திட சிறப்பு சட்டம் இயற்றிடுக உள்ளிட்ட 10 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: 'ராஜ துரோகி எடப்பாடி பழனிசாமியை வெற்றி பெற விடமாட்டோம்' - ஓபிஎஸ் ஆவேசம்