சென்னை: சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமான இன்று (ஏப்.14) நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முன்னணி திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை, எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
முன்னதாக விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்பு, தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டம் வாரியாக முதல் மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்குச் சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அம்பேத்கர் உட்படத் தலைவர்களில் குறித்துப் படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார்.
இதனிடையே, அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டுமென நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும், அதற்காக 10க்கும் மேற்பட்ட அணிகளை நியமித்துள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..!