சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு நேற்று (டிச.12) வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பினர் வழக்கறிஞரை நியமிக்க அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்குள் தள்ளி வைத்தார். அப்போது நீதிபதியிடம் முறையிட்ட நாகேந்திரன், வேலூர் சிறையில் இருந்து வருவதாகவும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் நீண்ட தூரம் பயணிக்க முடியவில்லை என்றும், ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை ஏன் கொலை செய்யப் போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு வந்தது எப்படி? விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு!
மேலும், 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை காவல்துறை சிறையில் வைத்தே கொல்ல முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்தார். அதனைக் கேட்ட நீதிபதி, உணர்ச்சிப்பூர்வமாகப் பேச வேண்டாம், இந்த வழக்கின் விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும். வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய பின், நாகேந்திரனை சிறை மாற்றுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்து, விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.