சென்னை: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (26). இவர் ஈரோட்டில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, கடந்த 2018ஆம் ஆண்டு முகப்பேர் பகுதியில் தனது நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், பாலமுருகனின் தூரத்து உறவினரான பாலகுமரன் (40) என்பவர், சென்னை முகப்பேர் ஜே.ஜே நகர் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்துள்ளார். பின்னர் இருவரும் அறிமுகமாகி, தொடர்ந்து பாலமுருகனின் நண்பர்களும் பாலகுமரனுக்கு அறிமுகமாகி உள்ளனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாலகுமரன், தான் எம்எல்எம் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வருவதாகவும், தம்மிடம் முதலீடு செய்தவர்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்டதாகவும் இளைஞர்களிடம் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார். இதை நம்பிய பாலமுருகனின் நண்பர்கள், பாலகுமரனிடம் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பிளக்ஸஸ் பிசினஸ் சொல்யூஷன் என்கிற நிறுவனத்தில் இளைஞர்கள் அனைவரும் முதலீடு செய்துள்ளனர். இதனை அடுத்து, 2021ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களாக முறையாக பணத்தை வட்டியாக கொடுத்துள்ளார், பாலகுமரன்.
இதனை நம்பிய இளைஞர்கள் தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது பணத்தையும் சேர்த்து, சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பாலகுமரனின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இதையடுத்து பணம் அதிகமாக சேர்ந்தவுடன், பாலகுமாரன் தலைமறைவாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள், அவர் பயன்படுத்திய ஐந்து தொலைபேசிகளையும் தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது தன்னுடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், கூடுதலாக 50 லட்சம் ரூபாய் வரை செலுத்தினால் மொத்த பணத்தையும் திரும்பப் பெற முடியும் எனவும் கூறி நம்ப வைத்து, மேலும் 50 லட்சம் ரூபாய் பணத்தை பாலகுமரன் இளைஞர்களிடமிருந்து பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் தாம் ஏமாந்து கொண்டிருப்பதாக சந்தேகம் அடைந்த இளைஞர்கள், பாலகுமரன் தொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விசாரணையின்போதுதான் பாலகுமரன் எம் எல் எம் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வந்ததும், அதன் மூலம் பெண்கள், இளைஞர்கள் என பலரையும் ஏமாற்றி 7 கோடி ரூபாய் வரை பணத்தை நூதனமாக வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் விராசணையில், இது தொடர்பாக ஏற்கனவே புகார்கள் இருந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பாலமுருகன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார். மேலும், காவல் ஆணையர் அலுவலகத்திலும் இது தொடர்பாக புகார் மனுவை கொடுத்த பிறகு, பாலகுமாரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எங்களைப் போலவே அடுத்தடுத்த இளைஞர்கள் பாதிக்கப்படக்கூடாது எனவும் பாதிக்கப்பட்ட பாலமுருகன் தெரிவித்துள்ளார்.