கடலூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பருத்திபுரம் சேர்ந்தவர் ராஜதுரை (26). இவருக்கு திருமணமாகி இரண்டரை வருடமாகியுள்ள நிலையில், ராஜதுரை நெல் அறுவடை இயந்திரத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது கடலூர் மாவட்டம் பல்லவராயநத்தம் பகுதியில் தங்கி நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட வந்தார்.
இந்நிலையில், ராஜதுரை நேற்று (அக்.20) இரவு இரு சக்கர வாகனத்தில் கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பைக் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் சென்று கொண்டிருந்த மாடு திடீரென அவரை முட்டி தூக்கியுள்ளதாகத் தெரிகிறது. அப்போது, மாட்டின் கொம்பு ராஜதுரை வயிற்றுப்பகுதியில் குத்தியதில், ரத்த வெள்ளத்தில் குடல் சரிந்து கீழே விழுந்துள்ளார். மேலும், பலத்த காயமடைந்த ராஜதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லிக்குப்பம் போலீசார், உயிரிழந்த ராஜதுரை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் மாட்டிற்கு ஒரு கொம்பு உடைந்து காயம் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்