நீலகிரி: கேரள மாநிலம் வயநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று அதிகாலை கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடு, முண்டக்கை மற்றும் சூரல்மலை போன்ற பகுதிகளில் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த பயங்கர நிலச்சரிவில் அப்பகுதிகளில் உள்ள வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலச்சரிவில் தமிழகத்தைச் சார்ந்த மக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த கரன்சி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் கௌசல்யா (26) குடும்பத்துடன் உயிரிழந்துள்ளது, அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து உயிரிழந்த கௌசல்யாவின் தந்தை ரவிச்சந்திரன் கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் மகள் கௌசல்யாவிற்கும், சூரல்மலை பகுதியைச் சேர்ந்த விஜிஸ் குட்டன் (36) என்பவருக்கும் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குடும்பத்துடன் மூவரும் உயிரிழந்து விட்டனர். மேலும், உடலை குன்னூருக்கு கொண்டு வர இயலாததால் அங்கேயே அவர்களது உடலை தகனம் செய்துவிட்டோம். மேலும், விஜிஸ் குட்டனின் பெற்றோர் உள்பட மூவரின் உடல் தேடப்பட்டு வருகிறது. அரசு அவர்களது உடலைக் கண்டுபிடிக்க உதவி புரிய வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்பு பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் இருந்து அனைத்து வகையிலும் உதவி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழகத்திலிருந்து இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்ப முதலமைச்சர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை வயநாடு சென்றடைந்து மீட்டுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: மீட்புப் பணிக்காக வயநாட்டில் முகாமிட்ட தமிழக குழுவினர்.. கோவையில் இருந்து செல்லும் நிவாரணப் பொருட்கள்!