புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மாங்கனாம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் மேட்டுப்பட்டி இந்திரா நகரில் 'பகவான்' என்ற பெயரில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர். சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் கஜா புயல் மற்றும் கொரோனா காலத்தில் தான் நடத்தி வரும் டீக்கடையில் டீ மொய் விருந்து நடத்தி, அதில் கிடைத்த மொய் பணத்தை பொது மக்களுக்கு உதவிடும் வகையில் அரசிடம் வழங்கியுள்ளார்.
மேலும், இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்களை காப்பாற்ற தமிழக அரசு பொதுமக்களிடமிருந்து உதவி கோரியபோதும், டீ மொய் விருந்து நடத்தி அதில் வந்த பணத்தை அரசிடம் செலுத்தி இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்களுக்கு உதவியுள்ளார்.
இந்த வரிசையில் தற்போது, கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் இன்று (ஆக.12) சிவகுமார் தனது டீக்கடையில் டீ மொய் விருந்து நடத்தி வருகிறார். சிவகுமாரின் டீ கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக டீ அருந்திவிட்டு அங்கு வைக்கப்பட்டுள்ள மொய் பாத்திரத்தில் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து வருகின்றனர்.
சிறுவன் 5K நிதியுதவி: இதில், மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகனும் ஏழாம் வகுப்பு மாணவனுமான சபரி என்ற சிறுவன் தனது சேமிப்பு பணமான ரூ.5 ஆயிரத்தை மொய் பணமாக அளித்து தேநீர் அருந்திச் சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
காலை 6:00 மணிக்கு தொடங்கிய இந்த டீ மொய் விருந்து மாலை 6 மணி வரை நடைபெற்று, இன்று (ஆக.12) திரட்டப்படும் இந்த நிதியானது கேரளா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவக்குமாரினுடைய இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில், "நான் தொடர்ந்து நான்காவது முறையாக இந்த டீ மொய் விருந்து நடத்தி வருகிறேன். ஏற்கனவே கஜா புயல், கொரோனா மற்றும் இலங்கை பொருளாதார நெருக்கடி போன்ற காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக டீ மொய் விருந்து நடத்தி உதவியுள்ளேன்.
அதிலும் குறிப்பாக, எங்களது பகுதியில் கணவனை இழந்ததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் டீ மொய் விருந்து நடத்தி ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வழங்கினேன். இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது கேரளா மாநிலம், வயநாடு பகுதியில் இயற்கை சீற்றத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தற்போது டீ மொய் விருந்து நடத்துகிறேன்.
இன்று (ஆக.12) காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை கடைக்கு டீ சாப்பிட வரும் பொது மக்களுக்கு, டீ மற்றும் பலகாரம் இலவசமாக கொடுத்து உபசரித்து, அவர்கள் கொடுக்கும் மொய் பணத்தை வயநாடு மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்பி வைக்க உள்ளேன்.
இன்றைய மொய் விருந்தில் பள்ளி மாணவர் ஒருவர் ரூ.5,000 மொய் அளித்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் இணையவழி மூலமாகவும் மொய் அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னால் முடிந்ததை மட்டும் செய்யாமல் எனது வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து உதவி செய்வது மனமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதேபோல எனது வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்போடு என்னுடைய சேவையை தொடர்ந்து செய்வேன்" என்று தெரிவித்தார்.
இந்த டீ மொய் விருந்து குறித்து வாடிக்கையாளர் கார்த்திக் என்பவர் கூறுகையில், "இதுபோன்று மொய் விருந்தின் மூலம் மொய் பெற்று அதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது மிகுந்த மனமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆகவே இதற்கு பொதுமக்கள் அனைவரும் உதவி செய்ய முன்வர வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் நேரில் சென்று உதவி செய்ய முடியாத சூழ்நிலையில், இவர்கள் மூலம் உதவி செய்வது சந்தோஷமாக உள்ளது. அதுமட்டுமின்றி கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தங்களது இல்லத்திற்கு வருபவர்களை போன்று இருகரம் கூப்பி வணங்கி வரவேற்று உபசரிக்கின்றார். இதுபோன்ற செயலுக்காக அவரை பாராட்ட வேண்டும்" என்று உனர்வுபொங்க தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: ஆட்டோ சவாரி வருமானத்தை நிவாரண நிதியாக கொடுக்கும் சென்னை பெண் ஒட்டுநர்!