மதுரை: திருச்சியைச் சேர்ந்த வளன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார் அதில், "தேசிய அளவிலான சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப்படிப்புகளில் சேர CLAT (Common Law Admission Test) எனப்படும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.4000-ம், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3500-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டணம் மிகவும் அதிகமாக உள்ள காரணத்தால், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஏற்கனவே 2018ஆம் ஆண்டில் விண்ணப்பக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாகக் கோரிக்கை எழுந்த நிலையில், அது தொடர்பாகக் குழு அமைத்து அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் தற்போதுவரை எடுக்கப்படவில்லை. ஆகவே, பொது சட்ட நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைக் குறைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், "வழக்கு தொடர்பாக மத்திய சட்டத்துறைச் செயலர் மற்றும் மத்திய கல்வித்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ''ஆண்டிப்பண்டாரம்'' எனும் சமூகத்தின் பெயரை இழிவாகப் பயன்படுத்தக் கூடாது என வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!