கடலூர்: "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 153வது தைப்பூச திருவிழா இன்று (ஜன.24) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, நாளை காலை 6 மணிக்குக் கருப்பு திரை, நீல திரை, பச்சை திரை, செம்மை திரை, பொன்மை திரை, வெண் திரை, கலப்பு திரை ஆகிய 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, தைப்பூச ஜோதியை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று உணவு அருந்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அன்னதானத்திற்காக, ஏராளமானோர் அரிசி, பருப்பு, காய்கறிகளை நன்கொடையாக வழங்குவது வழங்கிவருகின்றனர். அந்த வகையில் கடலூரில் காய்கறி வியாபாரியாக இருக்கும், பக்கீரான் என்பவர், அன்னதானத்துத் தேவையான காய்கறிகள், அரிசி மூட்டைகள் ஆகியவற்றை 20 வருடங்களாக வழங்கி வருகிறார்.
இதையும் படிங்க: பழனியில் புதிய மின் இழுவை ரயிலைத் துவக்கி வைத்த அமைச்சர்; பக்தர்கள் மகிழ்ச்சி!
அதேபோல், இந்த ஆண்டு பக்கீரான் 10 டன் எடைகளைக் கொண்ட காய்கறி, அரிசி மற்றும் 3 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்தார். அவர் இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும், வள்ளலார் மீது கொண்டுள்ள அன்பினால் பக்கீரான் இந்த சேவையைச் செய்து வறுத்தாக கூறப்படுகிறது.
இது தொடர்பாகக் காய்கறி வியாபாரி பக்கீரான் கூறியது, "20 ஆண்டுகளுக்கு முன் எனது நண்பர் ஒருவர் வள்ளலார் தர்மசாலைக்கு தங்களால் முடிந்ததை உதவியைச் செய்யுங்கள் என்றார். அப்போது ஐந்து 25 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கினேன். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் 10 மூட்டைகள், 25 என வழங்கினேன். தற்போது எனது வளர்ச்சி அதிகரித்துள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு என்னால் முடிந்த 10 டன் அளவுக்குக் காய்கறி, 3ஆயிரம் தண்ணீர் பாட்டில், 50 மூட்டை அரிசி ஆகியவற்றை வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசன விழாவிற்காக அனுப்பி வைத்துள்ளேன்" எனத் தெரிவித்தார். இஸ்லாமியச் சமுகத்தைச் சார்ந்த ஒருவர், மத உணர்வுகளைக் கடந்து வள்ளலார் ஞான சபைக்கு அனுப்பி சம்பவம், மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில்,நெகிழ்ச்சியடைய செய்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாக படையெடுத்து வரும் பக்தர்கள்!