சென்னை: காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அறிவித்துள்ள கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (ஜூலை 16) நடைபெற்றது.
இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல, திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, வில்சன், அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஒ.எஸ்.மணியன், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார், பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், விசிக சார்பில் திருமாவளவன், பாலாஜி ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இவர்கள் மட்டுமல்லாது, மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜாவாஹிருல்லா, புதுமடம் அலீம், பாஜக சார்பில் கரு நாகராஜன், கருப்பு முருகானந்தம், சிபிஎம் சார்பில் நாகை மாலி, சண்முகம், சிபிஐ சார்பில் ராமசந்திரன், மூ.வீரபாண்டியன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், சூரிய மூர்த்தி, புரட்சி பாரதம் சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி, மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், பூமிநாதன் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, "காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது.
இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு சட்டப்பூர்வமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை நாடிதான் நீரைப் பெற்றோம்.
இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும் கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் பின்வருமாறு,
- காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
- காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
- காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின் உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.
- இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும்.
இவ்வாறாக, அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் ஒருமனதாக தீர்மானங்களை எடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை!