சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள அன்னை இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரி (63). இவர் குரோம்பேட்டையில் 10 வருடங்களாக பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், பூ வியாபாரம் செய்ததில் வந்த பணத்தை சேர்த்து வைத்து ஆறு சவரன் தங்கச் செயின் ஒன்றை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு பூ வியாபாரம் செய்து கொண்டு இருந்த போது வலது உள்ளங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மூதாட்டி சுந்தரிக்கு சர்க்கரை நோய் இருப்பதால், காயம் குணமடையாமல் இரண்டு வருடங்களாக அவதிப்பட்டு வரும் நிலையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதேபோல், நேற்று (ஜூன் 26) முன்தினம் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டு பின்பு வீடு திரும்ப மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே சென்றபோது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி ஒருவர் மூதாட்டி சுந்தரியை அழைத்து, அவருக்கு அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெற்றுத் தருகிறேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
அப்போது, ஏற்கனவே பலமுறை சுந்தரி அரசு காப்பீட்டுத் திட்டத்திற்கு பதிவு செய்து காப்பீட்டுத் திட்டம் வராததால் இப்பொழுது காப்பீட்டுத் திட்டம் வந்தால் தனக்கும், தன்னுடைய குடும்பத்திற்கும் சிகிச்சை பார்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று எண்ணி, அந்த மர்ம நபர் சொல்வதைக் கேட்டதாக சுந்தரி கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், அந்த மர்ம நபர் மூதாட்டி சுந்தரியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பீட்டுத் திட்டம் பெற வேண்டும் என்றால், கழுத்தில் அணிந்திருந்த தங்கச்செயினை கழட்டி பத்திரமாக கைப்பையில் வைத்துக் கொள்ளுமாறு கூறியதால், சிறிதும் யோசிக்காமல் மூதாட்டி தங்கச் செயினை கழட்டி பையில் வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, மூதாட்டி சுந்தரியிடம் அந்த மர்ம நபர் சாதுரியமாக பேச்சு கொடுத்தபடி, பையில் வைத்திருந்த தங்கச் செயினை மூதாட்டியிடம் இருந்து வாங்கிக்கொண்ட அந்த நபர், தந்திரமாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் ஆறு சவரன் தங்கச் செயினை பறிகொடுத்து புலம்பியவாறு நின்று கொண்டிருந்த மூதாட்டியைப் பார்த்த மருத்துவமனையில் இருந்தவர்கள், உடனே இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த குற்றப்பிரிவு போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது, மூதாட்டியிடம் நாடகமாடி ஆறு சவரன் தங்கச் செயினை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் மரணம். வெளிநாட்டவரை கைது செய்த போலீசார் - நடந்தது என்ன?