சென்னை: சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்துள்ளது. அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, விமானத்திற்கு அனுப்பிக் கொண்டு இருந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த முகமது பைசல் (30) என்பவர், இந்த விமானத்தில் சுற்றுலாப் பயணியாக அபுதாபி செல்ல வந்துள்ளார். அப்போது, அவருடைய சூட்கேசை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்த போது, சூட்கேஸின் ரகசிய அறைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்கா டாலர் கரன்சி மறைத்து வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், முகமது பைசல் சூட்கேஸை திறந்து பார்த்து சோதனையிட்டுள்ளனர்.
அதனுள் ரூ.18 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். பின்னர், உடனடியாக முகமது பைசலின் விமான பயணத்தை ரத்து செய்ததுடன், அவரையும், அவர் மறைத்து வைத்திருந்த ரூ.18 லட்சம் வெளிநாட்டு பணத்தையும், மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, முகமது பைசலை கைது செய்த சுங்க அதிகாரிகள், ரூ.18 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் கரன்சியை பறிமுதல் செய்தனர்.
மேலும், முகமது பைசலிடம் விசாரணை நடத்தினர். அப்போது முகமது பைசல், இந்தப் பணத்தை கூலிக்காக எடுத்துச் செல்லும் கடத்தல் குருவி என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து, கணக்கில் இல்லாத இந்த பணத்தை, இவரிடம் கொடுத்து அனுப்பிய நபர் யார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலம் கடம்பூர் பட்டாசு குடோனில் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு! - Salem Fire Accident