திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி குண்டூர் அருகே உள்ள அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகனான பாலமுருகன் (23) சிவில் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார். மாநில அளவில் 33வது இடத்தையும், திருச்சி மாவட்டத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். எளிய ஓட்டு வீட்டில் படித்து நீதிபதியான இவரை குண்டூர் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்குத் தேர்வு அண்மையில் நடந்தது. இதில், 6031 ஆண்களும், 6005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 9 இடங்களில் தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நவம்பரில் நடந்தது. முதல்நிலை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்குத் தற்காலிகமாக 472 பேர் அழைக்கப்பட்டு, அதற்கான முடிவுகள் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் குண்டூர் அருகே உள்ள அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியான மாமுண்டி-விஜயா தம்பதியின் மகன் பாலமுருகன் தமது 23 வயதில் சிவில் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார்.
திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் இளநிலை சட்டம் பயின்ற இவர், ஏழ்மை நிலையைக் கருதி விவசாய கூலி தொழிலுக்குச் சென்று வந்துள்ளார். ஓய்வு நேரங்களில் தன் கனவாக சிவில் நீதிபதியாக வேண்டும் என்ற முனைப்பில் சட்டம் பயில்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவீல் நீதிபதி தேர்வு முடிவில், பாலமுருகன் மாநில அளவில் 33வது இடத்தையும் திருச்சி மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார்.
எளிய குடும்பத்தில் பிறந்து படித்து நீதிபதியான இவரை அந்த பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர்.
நீதிபதியானது குறித்து பாலமுருகனிடம் கேட்ட போது, “தாம் ஆறாவது படிக்கும் போதே வக்கீல் ஆக வேண்டும், நீதியரசராக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த நிலையில் தற்போது கனவு நினைவானது. நான் நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு ஏழை பணக்காரன், சாதி மத பாகுபாடு இன்றி நியாயமான முறையில் தீர்ப்பை வழங்குவேன்” எனத் தெரிவித்தார். பாலமுருகன் பயிற்சி காலத்திற்குப் பின்னர் நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.20,198 கோடி ஒதுக்கீடு.. முழு விவரம்..!