சென்னை: தமிழ்நாட்டில் வழக்கத்தை விட இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. இதனால், மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனிதர்களைப் பொறுத்தவரையில் சுற்றுப்புற வெப்பநிலையானது, சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும்போது உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். அவ்வாறு வியர்வை வெளியேறுவதால் உப்புச்சத்து பற்றாக்குறையும், நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் உடலில் ஏற்படுகின்றன. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு, ஹீட் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படலாம்.
எனவே, வெயிலின் தாக்கம் உணர்ந்து பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வர வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வார்டுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க ஈரத்துணி, ஐஸ் பேக், ஓஆர்எஸ் கரைசல் உள்ளிட்டவை தயாராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: "எனது சாவுக்கு காரணமானவர்களை.." நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதியதாக மற்றொரு கடிதத்தில் பகீர் தகவல் - Nellai Congress Leader Jayakumar