சிவகங்கை: கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நதிக்கரை நாகரீகம் பற்றி அறிய அகழாய்வு பணிகள் தொடங்கின. இதில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய கண்ணாடி மணிகள், சூது பவள மணிகள், மண்பாண்டங்கள், சில அணிகலன்களின் பாகங்கள், விளையாட்டு பொருட்கள், ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.
நகர நாகரீகத்திற்கு இணையான வகையில் வாழ்ந்திருப்பது அவர்கள் பயன்படுத்திய பொருட்களில் இருந்து கண்டறிய முடிந்தது. கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியது என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டு சீப்பு, வரிவடிவ எழுத்துகள், பானை ஓடுகள், தங்க காதணிகள் உள்ளிட்ட 13 ஆயிரத்து 344 பொருட்கள் ஆறு கட்டட தொகுதிகளில் தனித்தனியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்தாண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்ட அருங்காட்சிகத்தை காண தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நேற்று அருங்காட்சியகத்தை காண அமெரிக்கா, மியான்மர், பிலிப்பைன்ஸ், கொரியா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பத்து பேர் கொண்ட கல்வியாளர்கள் அடங்கிய குழு வந்திருந்தது
பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக பணியாற்றும் இவர்கள் இந்தியாவின் கல்வி முறை, மக்களின் பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறை உள்ளிட்டவைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக ஒரு மாத கால பயணமாக இந்தியா வந்துள்ளனர். அதனிடையே கீழடி அருங்காட்சியகத்தை பற்றி கேள்விப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலமாக அருங்காட்சியகத்தை கண்டு ரசித்தனர்.
அமெரிக்காவின் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் இறையியல் துறை பேராசிரியரான லியோ ரீபோர், மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து காட்சிப்படுத்திய விதம், தொழில் துறை சார்ந்த மக்கள் வசித்த இடம் இது என பொருட்களை காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என்றார். சிங்கப்பூரைச் சேர்ந்த ஜெரோம், பண்டைய கால நாகரீகத்தை அப்படியே பழமை மாறாமல் காட்சிப்படுத்தியுள்ளனர். தற்போதைய கால கட்டத்தை போன்றே 2600 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறியும் போது ஆச்சர்யமாக உள்ளது.
அதனை விட பொருட்களை காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. யானை தந்தத்தால் செய்யப்பட்ட சீப்பு, ஆயுதங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்றார். அதன் பின் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருப்பதை அறிந்து, அதனையும் கண்டு ரசித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்முத்து கூறுகையில், “பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் கீழடி வந்துள்ளனர்.
பண்டைய கால வணிகம், அதுசார்ந்த நாணயங்கள், பானை ஓடுகள், நதிகள், கடல் வழி வணிகம் உள்ளிட்டவற்றிற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், பண்டைய கால மக்களின் கல்வியறிவுக்கு சான்றாக பானை ஓடுகள் காணப்படுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'உழவே தலை..உணவே முதல்': பெரம்பலூரில் பாரம்பரிய விதைத் திருவிழா! - traditional seed festival