சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் எனவும், பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வழக்கத்திற்கு மாறான சூறை காற்றுடன் அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆவடி மாநகராட்சி உட்பட்ட நந்தவன மேட்டூர் பகுதியில் ராட்சத விளம்பர பேனர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அதிவேக காற்றின் காரணமாக துண்டு துண்டுகளாக கிழிந்தது. மேலும், கிழிந்த துண்டுகள் பலத்த சூறைகாற்று வீசி வரும் நிலையில் பிரிந்து ஆவடி - பூந்தமல்லி பிரதான சாலையில் பறந்து சென்று விழுந்தது.
இதையும் படிங்க: கனமழையால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு.... கரையோர மக்கள் அச்சம்!
இந்த நிகழ்வு சாலையில் செல்வோருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதே போன்று வைக்கப்பட்டுள்ள மற்ற ராட்சத பேனர்களும் கிழிந்து தொங்கி வருவதால் வாகனத்தில் செல்வோர் மீது விழுந்து விபத்து ஏற்படும் எனவும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று சூறை காற்றில் சாலையில் தடுப்புகளுக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகாடுகள் காற்றில் தூக்கி சாலையில் வீசப்பட்டன. அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில், அவ்வழியே சென்ற காவலர்கள் சாலையில் கிடந்த பேரிகாடுகளை கொட்டும் மழையில் பொறுப்புணர்வுடன் அப்புறப்படுத்தி சாலை ஓரத்தில் வைத்து சென்றனர்.
நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கையாக ஆவடியில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ராட்சத பேனரால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஃபெஞ்சல் புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது எனவும், புயல் கரையைக் நெருங்க, நெருங்க நகர்வு வேகம் குறையக்கூடும் எனவும் தெரிவித்தார்.