நெல்லை: இந்தியாவில் 100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டகூடிய ரயில் நிலையங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் உள்ளது. எனவே இந்த ரயில் நிலையம் பயணிகள் கூட்டத்துடன் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை, பெங்களூரு என பெருநகரங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் கூட்டத்தால் கூடுதல் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த நிலையில், காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார் அதில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி மிரட்டல் விடுத்துவிட்டு, தொலைபேசி தொடர்பை அவர் துண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர், தீயணைப்பு துறை பிரிவு, இருப்பு பாதை காவல் துறை அதிகாரிகள் என தொடர்ச்சியாக மூன்று மணி நேரமாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லை வழியாக செல்லக்கூடிய ரயில்கள், நெல்லை வந்து சேரும் ரயில்கள், புறப்படும் ரயில்கள் என அனைத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் கொண்டு பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில் நிலையத்தில் உள்ள அறைகள் இருப்பு பாதை வழிகள் என அனைத்திலும் சோதனை செய்யப்பட்டது.
மறுபுறம், கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த நபரின் விவரம் குறித்து, செல்ஃபோனில் சிக்னல் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. முடிவில், நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிவபெருமாள் என்பவர் கண்ட்ரோல் ரூமிற்கு போன் செய்துள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
உடனே மாநகர காவல் துறை துணை ஆணையர் கீதா தலைமையில் காவல் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று சிவபெருமாளை கைது செய்தனர். நெல்லை காவல்துறை உதவி ஆணையர் அலுவலகம் அழைத்து வந்து சிவபெருமானிடம் விசாரணை நடத்தியபோது அவர் முழுபோதையில் இருந்தது தெரியவந்தது.
கங்கை கொண்டானை சேர்ந்த அவர் சரியாக எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த நிலையில், சமீபகாலமாக வண்ணாரப்பேட்டையில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் குடிபோதையில் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக அவர் மிரட்டல் விடுத்ததும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த விடுமுறை தினத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் அங்கு சில மணி பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வருமான வரி அதிகாரி போல் நடித்து கொள்ளை முயற்சி! தலைநகரை அலறவிட்ட குற்றச் செய்திகள்! - Chennai Crime News