தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எஸ்.வேல்மயில் (34) - பி. பேபி (36). மாற்றுத்திறனாளியான இவர்களுக்கு, கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வேல்மயில் பெட்ரோல் பங்க் நிலையத்திலும், பேபி ஒரு மதிய உணவு மையத்தில் அமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தற்போது வேல்மயிலின் பெற்றோருடன் தூத்துக்குடியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என விரும்பியுள்ளனர். இதற்காக தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு வளர்ச்சி மையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பதிவு செய்துள்ளனர்.
பதிவிற்குப் பின்பு, ஒரு சமூகப் பணியாளர் அவர்களின் இல்லத்திற்குச் சென்று குழந்தை வளர்ப்பதற்கான பரிசோதனை (Home Study) செய்து குழந்தை வளர்ப்பதற்கு தகுதி உடையவர்கள் என சான்றிதழ் அளித்துள்ளார். இருப்பினும், சில காரணங்களால் வேல்மயில் தம்பதியால் குழந்தையைத் தத்தெடுக்க முடியாமல் போனது.
இதற்காக கடந்த 4 வருடங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இது குறித்து அறிந்து தூத்துக்குடி எம்பி கனிமொழி, தம்பதியை தொடர்பு கொண்டு ஆறுதல் அளித்துள்ளார். மேலும், குழந்தை தத்தெடுக்கத் தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார்.
இதனையடுத்து, கடந்த ஜூலை 9ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று மறுபரிசோதனை செய்த மருத்துவர்கள். இவர்கள் 100 சதவீதம் குழந்தையை வளர்ப்பதற்கு தகுதி உடையவர்கள் என சான்றிதழ் வழங்கியுள்ளனர். அந்த சான்றிதழ் மின்னஞ்சல் மூலமாக CARA-வுக்கு அனுப்பி உள்ளனர்.
4 வருட காத்திருப்புக்கு பிறகு, சிறப்பு தத்தெடுப்பு நிறுவனத்தினர் கடந்த ஜூலை 23ஆம் தேதி வேல்மயில் தம்பதியினரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். இதற்கு உறுதுணையாக இருந்த கனிமொழி எம்பியை நேரில் சந்தித்த தம்பதியினர், அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அட 10.5% ஐ விடுங்க.. வன்னியர்கள் பெறும் இடஒதுக்கீடு அத விட அதிகம்.. ஆர்.டி.ஐ. கூறும் தகவல் என்ன?