சென்னை: கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 67 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கும், இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பாக இப்படி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை திட்டம் போட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது'' என தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பற்றி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டு சதியே காரணம் என அண்ணாமலையை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக 1 கோடி ரூபாய் மான நஷ்ட கேட்டு சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் அண்ணாமலை தாக்கல் செய்துள்ள மனுவில், "திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசியுள்ளார். அதனால், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஆர்.எஸ்.பாரதி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனாலும், ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்கவில்லை. தமிழக அரசு நேர்மையான நிர்வாகித்தை செய்யத் தவறிவிட்டது. அரசின் செயலற்ற தன்மையை மக்களிடம் இருந்து திசைதிருப்பவே ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளதால், அவதூறு சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது. அப்போது, "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அண்ணாமலையை தொடர்புபடுத்தி பேசியதாக தொடரப்பட்ட இந்த வழக்கில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜூலை 18ஆம் தேதி பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!