திருவள்ளூர்: திருவள்ளுவர் அடுத்த கைவண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மூத்தோர் தடகள வீரரான ஓவியர் சாமுவேல் (75). இவர் சிறு வயது முதலே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக 200 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்தநிலையில் இந்த மாதம் 12, 13 ஆகிய 2 நாள்கள் மலேசியாவின் தலைநகரான கோலலாம்பூரில் அமைந்துள்ள புக்கிட் ஜெல்லி ஸ்டேடியத்தில், ஆசிய அளவிலான 75+ பிரிவில் மூத்தோர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 30 நாடுகளில் இருந்து மூத்தோர் தடகள வீரர்கள் இதில் பங்கு பெற்றனர்.
இதில் தமிழகத்தின் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 10 மூத்தோர் தடகள வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.அதில் திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்தை சேர்ந்த ஓவியர் சாமுவேல் 75+ வயதுடைய பிரிவில் நீளம்/உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கு பெற்றனர்.
இதில் உயரம் தாண்டுதலில் 1.15 மீட்டர்ஸ் தாண்டி தங்க பதக்கமும், நீளம் தாண்டுதலில் 3.65 மீட்டர்ஸ் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். மேலும் மும்முறை தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு 7.63 மீட்டர்ஸ் தாண்டி முதலாவது இடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
இதையும் படிங்க: இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டி; 3வது முறையாக தங்கத்தை தக்க வைத்த தமிழக அணி!
இதன் மூலம் 2 தங்கம் 1 வெள்ளி வென்று அசத்தியுள்ளார் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து உள்ளார் 75 வயதான சாமுவேல். இவரை கௌரவிக்கும் விதமாக மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள புத்தர் உடற்பயிற்சி கூடத்தின் நிறுவனர் சீனிவாசன் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட வீரர்கள், தேசிய பளுதூக்கும் வீரர் ஆனந்தன், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளான வழக்கறிஞர் உள்ளிட்டோர் தடகள வீரர் சாமுவேலுக்கு பொன்னாடை போர்த்தி
சந்தன மாலை அணிவித்தும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தடகள வீரர் சாமுவேல் கூறுகையில்,"தேசிய அளவில் தங்கம், வெள்ளி,போன்ற பதக்கங்களை வென்று தாயகம் திரும்பவும் எங்களுக்கு மாவட்ட நிர்வாக அளவில் கூட மரியாதை கிடைப்பதில்லை. இளம் வீரர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று தாயகம் திரும்பினார் அவர்களை அரசு சார்பில் கௌரவித்து ஊக்க தொகை வழங்கப்படுகிறது.
ஆனால் மூத்தோர் வீரர்கள் வெளிநாட்டிற்குச் சென்று வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்கின்றோம் ஆனால் எங்களுக்கு உதவி செய்வதுமில்லை பாராட்டு தெரிவிக்கவும் யாரும் இல்லை. எனவே வருகின்ற காலங்களில் தமிழக அரசு எங்களைப் போன்ற மூத்தோர் வீரருக்கு உதவிகள் செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.