திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் கண்டியன் கோயில் அருகே உள்ள பெரியாயிபட்டி, பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே உள்ள ஏ.டி.காலனியைச் சேர்ந்தவர் 60 வயதான கூலித்தொழிலாளி பழனிசாமி - லதா தம்பதி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், பழனிசாமி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தனது பெரிய மகளுடன் திருப்பூரில் வசிக்கும் நிலையில், லதா 2 மகள்கள் மற்றும் 3 வயது மகனுடன் குடிசை வீட்டில் வசிக்கிறார். 11 வயதான இளைய மகள் வைஷ்ணவி கண்டியன் கோவில் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில், பிய்ந்து போன குடிசை வீட்டில் மிகவும் ஏழ்மை நிலையில் இவர்கள் வசித்து வருகின்றனர். மழை பெய்தால் ஒழுகும் தகரம் வேயப்பட்ட குடிசை, வெறும் தென்னை ஓலைகளை வைத்து கட்டப்பட்ட இடுப்பு உயரம் மட்டுமே உள்ள கழிப்பறை என இவர்கள் பல கஷ்டங்களுக்கு இடையில் தங்களது வாழ்வை நகர்த்தி வருகின்றனர்.
ஆறாம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவியும், 17 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட மகள் வளர்மதியும் கழிப்பறை வசதி இல்லாமல் தவிக்கிறார்கள் என்று அவர்களது தாயார் லதா வேதனையுடன் கூறுகிறார். இவர்கள் கஷ்டத்தைப் பார்த்து தனியார் நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக பணியாற்றும் பாலசுப்பிரமணியம் என்பவர், சில வருடங்களுக்கு முன் வீட்டுக்கு தகரக் கூரை போட்டுத் தந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி வைஷ்ணவி இது குறித்து கூறுகையில், “படிப்பதற்கு மின் விளக்கு இல்லை, எங்கள் வீட்டுக்கு மின்சார வசதி வேண்டும். மழையில் ஓட்டை வீடு ஒழுகிறது, கழிப்பறையும் ஓட்டையாக இருக்கிறது. எங்களுக்கு அரசு வீடு கட்டித்தர வேண்டும் மற்றும் மின்சாரம், கழிப்பறை போன்ற வசதிகளை செய்துதர வேண்டும்" என்று கூறுவது மனதைக் கனக்கச் செய்கிறது.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு மார்க்கில் இரட்டையர்கள் காட்டிய ஒற்றுமை.. 484 மார்க் எடுத்து சாதனை!