சென்னை: அதிக தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு 'கனவு ஆசிரியர்' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், 'கனவு ஆசிரியர் விருது'க்கான பரப்புரை துவக்கி வைக்கப்பட்டு 08.03.2023 முதல் 20.03.2023 வரை ஆசிரியர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், ஆசிரியர்களது விருப்பத்திற்கேற்ப 42 பாடப் பிரிவுகளின் கீழ் இந்த விருதுக்கு ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து 18,000 ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர்.
MCQ தேர்வு: முதல்கட்டமாக, இணையவழி தேர்வில் 10,305 ஆசிரியர்கள் MCQ தேர்வினை எழுதினர். இவர்களிலிருந்து 2008 ஆசிரியர்கள் அடுத்தகட்ட தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2ஆம் கட்ட தேர்வு: கற்பித்தலின் நோக்கம், கற்பித்தலின் நவீன புதுமையான உத்திகள், கற்பித்தலுக்கு திட்டமிடல், மதிப்பீட்டு முறை, குறைதீர் கற்பித்தல் ஆகியனவற்றை மதிப்பீடு செய்யும் வகையில் 2ஆம் கட்ட தேர்வு நடைபெற்றது. 571 இடைநிலை ஆசிரியர்கள், 743 பட்டதாரி ஆசிரியர்கள், 222 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 1,536 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களிலிருந்து 992 ஆசிரியர்கள் மூன்றாம் கட்ட தேர்விற்கு தகுதிபெற்றனர்.
3ஆம் கட்ட தேர்வு: 5 கட்டங்களாக மூன்றாம் கட்டத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் ஆசிரியர்களுடைய பேச்சாற்றல், பாடப்பொருள் சார்ந்த அறிவினை வெளிப்படுத்தும் திறன், கற்பித்தல் நுட்பங்கள், வகுப்பறை மேலாண்மை, தெளிவாக எடுத்துரைக்கும் திறன், தகவல் தொடர்பு ஆளுமை ஆகியன நேரடியாக உற்று நோக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.
இத்தேர்வில் 355 இடைநிலை ஆசிரியர்கள், 482 பட்டதாரி ஆசிரியர்கள், 127 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 964 ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். இவர்களிலிருந்து குறைந்தபட்சமாக 75 சதவிகித மதிப்பெண் பெற்ற 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 41 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு முடிவுகள்: கனவு ஆசிரியர் விருதுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 24.11.2023 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்டார். கனவு ஆசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 380 ஆசிரியர்களுக்கு நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றும் விருதும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
இதையும் படிங்க: நெல்லை நீட் அகாடமி விவகாரம்; புகார் அளிக்காமலேயே நடவடிக்கை சாத்தியமானது எப்படி? சட்டம் கூறுவது என்ன?
கல்விச் சுற்றுலா: கனவு ஆசிரியர் விருதுக்கு தெரிவானவர்களுள், 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற்ற 325 ஆசிரியர்கள் உள்நாட்டு கல்விச் சுற்றுலாவிற்கும், 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவிற்கும் அழைத்து செல்லப் படுவார்கள் என அறிவித்தார்கள்.
டேராடூன்: அரசு அறிவிப்பின் அடிப்படையில், 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற்ற 325 ஆசிரியர்கள் 24.04.2024 முதல் 01.05.2024 வரை உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனிற்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
பிரான்ஸ்: இதன் தொடர்ச்சியாக, 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற 32 தொடக்கக்கல்வி ஆசிரியர்கள், 22 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் என மொத்தம் 54 பேர் இன்று (அக்.23) முதல் அக்.28ஆம் தேதி வரை ஆறு நாட்கள் பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 54 ஆசிரியர்களுடன் சேர்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ராஜேந்திரன், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் அரவிந்தன் ஆகியோரும் பிரான்ஸ் சென்றுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்