தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் என்ற இளைஞர், 15 வயது சிறுவன் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவரை அடித்து கொடுமைப்படுத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார். அப்போது, அவரிடம் இருந்து தப்பிய சிறுவன், தனக்கு நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிறுவனது பெற்றோர் கம்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கணேசன் முன்பு இன்று (ஜன.31) விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சியங்களின் அடிப்படையில் இளைஞர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவரை குற்றவாளி எனத் தீர்மானித்து, போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது விபத்து.. கல்லூரி மாணவி பலி; இரு மாணவர்கள் மாயம்!
மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு மெய்க்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார். குறிப்பாக, சிறுவனை அடித்து துன்புறுத்தி, ரத்தக்காயம் ஏற்படுத்தியதால், (IPC) இந்திய தண்டனைச் சட்டம் 323-ன் கீழ், மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏக காலத்திற்கும் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து குற்றவாளி விஜய்யை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம்: எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் ஜாமீன் கோரிய மனு இன்று விசாரணை