நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் நூற்றாண்டை கடந்த யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற ஊட்டி மலை ரயில் இன்று 125ஆம் ஆண்டை கொண்டாடி வருகிறது. இந்த மலை ரயிலை நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்களால் 1899ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான வழியில் பல்வேறு அழகிய இயற்கை காட்சிகளைக் கண்டு ரசித்து வரக்கூடிய அனுபவங்களை இந்த மலை ரயில் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கிறது.
மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று 125ஆம் ஆண்டை முன்னிட்டு குன்னூர் ரயில் நிலையத்தில் நுழைந்த மலை ரயிலுக்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஊட்டி மலை ரயில் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கோவை முதன்மை இரயில்வே அதிகாரி அனுராத் தாகூர் சேர்ந்து கேக்கை வெட்டி, பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் லோகோ பணிமனை ஊழியர்கள் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், குழந்தைகளுக்கென பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மலை ரயில் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் நடராஜன், “இந்த மலை ரயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றதில் இருந்து அதிகரித்திருக்கிறது. இதனால் மறைமுகமாக ஆட்டோ சேவைகள், டாக்ஸி சேவைகள், தங்கும் விடுதியின் செயல்பாடுகளும் முன்னேற்றம் பெற்று வருகிறது. எனவே, பயணிகளின் வருகை அதிகரித்து வருவதை அரசு கருத்தில் கொண்டு மற்றொரு ரயில் சேவையைத் தொடங்கினால் நன்று” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் கார் செட்டில் சிறுத்தை... சிக்கிய ஐந்து பேரின் நிலை என்ன?