தஞ்சாவூர்: கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டரான வேதவள்ளி அம்மாள், இன்று (மார்ச் 9) உயிரிழந்ததையடுத்து, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கும்பகோணம் மாநகராட்சி 23வது வட்டம், மோதிலால் தெருவில் வசித்து வந்தவர், வேதவள்ளி அம்மாள். இவருக்கு வயது 110. சுதந்திர போராட்ட வீரரான இவரது கணவர் ராமகிருஷ்ணன், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், வேதவள்ளியின் அக்கா நவநீதம் அம்மாளுடன் வேதவள்ளியும் வசித்து வந்துள்ளார்.
அக்கா நவநீதம் அம்மாளும், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவரது 100வது வயதில் உயிரிழந்ததையடுத்து, நவநீதம் அம்மாளின் மகன் இராமச்சந்திரன் (70) பராமரிப்பில் வேதவள்ளி அம்மாள் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 9) காலை வயது மூப்பு காரணமாக வேதவள்ளி அம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து, வேதவள்ளி அம்மாளின் விருப்பப்படி, அவரது குடும்பத்தினர் ஒத்துழைப்போடு, அவரது இரண்டு கண்களும் குடந்தை காவேரி லயன்ஸ் சங்கத்திற்கு தானமாக வழங்கப்பட்டது.
தீவிர திமுக அனுதாபியான வேதவள்ளி, தனது வாழ்நாள் முழுவதும் திமுகவிற்கே வாக்களித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நல்ல உடல் நலத்தோடு அவர் திமுகவிற்கு வாக்களிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ள சம்பவம் உறவினர்கள் மற்றும் திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து வேதவள்ளியின் உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.