தேனி: பெரியகுளம் அருகே தொடர் கனமழை காரணமாக உருட்டி குளத்திலிருந்து உபரி நீர் வெளியே செல்ல முடியாமல் விலை நிலங்களுக்குள் புகுந்ததால், சுமார் 100 ஏக்கர் நடவு செய்த நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை பகுதியில் உள்ள ஆண்டி குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர்கள் அப்பகுதியில் உள்ள உருட்டி குளத்துக்கு வருகின்றனர். இந்த நிலையில், தொடர் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஆண்டிகுளம் நிறைந்து உபரி நீர் அதிகளவில் வெளியேறி, கீழுள்ள உருட்டி குளத்திற்கு வந்த நிலையில், உருட்டி குளம் முழுவதும் நிரம்பி உபரி நீர் செல்ல வழி இல்லாமல் அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்குள் புகுந்து நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை சூழ்ந்துள்ளது.
பருவமழையால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதியில் விவசாயிகள் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் மழைக் காலங்களில் உருட்டி குளத்தில் இருந்து உபரி நீர் வெளியே செல்ல முடியாமல் விலை நிலங்களுக்குள் வருவதால் முற்றிலும் நடவு செய்யும் நெல் பயிர்கள் சேதம் அடைவதாக அப்பகுதி நெல் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுவுக்கு அடிமையான மகன் கொலை.. தூத்துக்குடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது..!
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி மாரிமுத்து கூறுகையில், “நெல் நடவு செய்யப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில், நெற்பயிர்களில் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி உள்ளது. இதனால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்பொழுது அழுகி வருகின்றன. இந்த பிரச்சனை குறித்து தமிழக அரசு சார்பில், சேதம் அடைந்த நெல் பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜா கூறுகையில், “உருட்டி குளத்தில் நீர் வெளியேறுவதற்கான வாய்க்கால் அடைபட்டு இருப்பதால், குளத்தில் தேங்கும் நீரானது விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. 2 நாள்கள் முன்பாக நடவு செய்யப்பட்ட பயிர் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. குளத்திலிருந்து உபரி நீர் வெளியேறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்