ஐதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் நட்சத்திர வீரர் நிகோலஸ் பூரன் நடப்பாண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து புது சாதனை படைத்து உள்ளார். நடப்பாண்டில் மட்டும் நிகோலஸ் பூரன் 20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் 2 ஆயிரத்து 59 ரன்கள் குவித்துள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய நிகோலஸ் பூரன், நடப்பாண்டில் மொத்தம் 2 ஆயிரத்து 59 ரன்களை குவித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பார்படோஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 பந்துகளில் 27 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த சாதனையை நிகோலஸ் பூரன் படைத்தார்.
இதற்கு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வன் கடந்த 2021ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 36 ரன்கள் குவித்து ஓராண்டில் அதிக டி20 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்து இருந்தார். இந்நிலையில், ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை நிகோலஸ் பூரன் முறியடித்து புது வரலாறு படைத்துள்ளார்.
நடப்பாண்டில் நிகோலஸ் பூரன் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், எம்ஐ எமிரேட்ஸ், எம்ஐ நியூயார்க், நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ், ராங்பூர் ரைடர்ஸ், மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி 2 ஆயிரத்து 59 ரன்களை குவித்துள்ளார். நிகோலஸ் பூரன் நடப்பாண்டில் 20க்கும் மேற்பட்ட இன்னிங்ஸ்களில் விளையாடி அதில் 14 அரை சதங்கள் விளாசி உள்ளார்.
மேலும், பல்வேறு ஆட்டங்களில் 90 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதற்கு முன் 2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நிகோலஸ் பூரன் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அதேநேரம், முகமது ரிஸ்வான் கடந்த 2021ஆம் ஆண்டு 45 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 ஆயிரத்து 23 ரன்கள் குவித்தார்.
அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து வீரர்கள் அலெக்ஸ் ஹெல்ஸ், ஜோஸ் பட்லர் உள்ளனர். 5வது இடத்தில் மீண்டும் முகமது ரிஸ்வான் உள்ளார். அலெக்ஸ் ஹெல்ஸ் 2022ஆம் ஆண்டு 64 இன்னிஸ்ங்களில் விளையாடி ஆயிரத்து 946 ரன்கள் குவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஜோஸ் பட்லர் 2023ஆம் ஆண்டு 55 இன்னிங்ஸ்களில் ஆயிரத்து 833 ரன்கள் குவித்து உள்ளார். 2022ஆம் ஆண்டு முகமது ரிஸ்வான் 44 இன்னிங்ஸ்களில் ஆயிரத்து 817 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் அணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ! எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம்! - IPL Retention announcement