சேலம்: டிஎன்பிஎல் 8வது சீசன் சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8வது லீக் போட்டியில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், விஜய் சங்கர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர் கொண்டது.
சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறகிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது.
இதில் அதிரடியாக விளையாடிய ப்ரதோஷ் ரஞ்சன், 46 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். திருப்பூர் அணி தரப்பில் முகமது அலி 3 விக்கெட்டுகளையும், நடராஜன், மதிவண்ணன் மற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது திருப்பூர் தமிழன்ஸ் அணியின் ஓபனிங் பேட்மேன்களாக ராதாகிருஷ்ணன் - துஷார் ரஹேஜா ஆகியோர் களமிறங்கினர். இதில் ராதாகிருஷ்ணன் 15 ரன்களுக்கு வெளியேற, அடுத்து களமிறங்கிய அமித் சாத்விக் 14 ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
இதனையடுத்து களமிறங்கிய கனேஷ், சேப்பாக் அணியின் பந்து வீச்சை நாலபுறமும் சிதறடித்தார். ஆனால் மறுபுரம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது தடுமாறிய திருப்பூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் 15 ரன்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி பெற்றது.
சேப்பாக் அணி தரப்பில் கணேசன் பெரியசாமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரதோஷ் ரஞ்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸை நடப்பு தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது.
இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்திருந்தது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் திருப்ப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி நடப்பு தொடரில் புள்ளி கணக்கைத் துவங்கியுள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
இதையும் படிங்க: "பாரிஸ் ஒலிம்பிக்கில் அந்த பொன்னான நேரத்திற்காக காத்திருக்கிறேன்" - தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் பெருமிதம்!